TamilsGuide

வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி மீது புதிய குற்றச்சாட்டுக்கள்

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் மீது அமெரிக்கக் குடிமக்களைச் சித்திரவதை செய்ததாகப் புதிய குற்றச்சாட்டுகளைப் சுமத்த அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தயாராகி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஒரு டசனுக்கும் மேற்பட்ட அமெரிக்கக் குடிமக்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் காராகாஸில் உள்ள அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் போது மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது நியூயார்க்கில் உள்ள கூட்டாட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் மீது ஏற்கனவே போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் மீதான வழக்கு விசாரணை 2027 ஜூன் 1 ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சித்திரவதையில் தொடர்புடைய மேலும் பல அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அமெரிக்க புலனாய்வாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என மதுரோவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நியூயார்க் அரசு வழக்கறிஞர் அலுவலகம் மறுத்துவிட்டது. சுகாதாரக் காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலியா புளோரஸை வீட்டுக்காவலில் வைக்கக் கோரி அவரது வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளது. அதேவேளையில், சித்திரவதை தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  


 

Leave a comment

Comment