• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் பணியின் போது மூளை சாவடைந்த செவிலியர்! பணியிட விபத்து அல்ல எனக் கூறி இழப்பீடு மறுப்பு

சீனாவின் நைருதிப் பகுதியில் அமைந்துள்ள சுன்யீ நகரில் உள்ள குய்சோவ் மாவோதாய் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 30 வயதான செவிலியர் சென் ஜியாஜியா, பணியில் இருந்தபோதே திடீரென மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 10 நாட்கள் போராடி அவர் உயிரிழந்த போதிலும், அவரது மரணம் "பணியிட விபத்து அல்லது பணி சார்ந்த மரணம்" அல்ல என்று அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய அரசு இழப்பீடு மறுக்கப்பட்ட நிலையில், சீனாவின் இணையவெளியில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மருத்துவமனையின் ரேடியாலஜி பிரிவில் பணியில் இருந்தபோது, சென் ஜியாஜியாவுக்குக் கடுமையான தலைவலியும் வாந்தியும் ஏற்பட்டது. உடனடியாக சக ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டது கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

சுமார் 10 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 14-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக சோங்கிங் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர். இதன்பின்னர் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்தது.

சீன தொழிலாளர் சட்ட விதிகளின்படி, ஒரு ஊழியர் பணியிடத்தில் இருக்கும்போதோ அல்லது பணியின் போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ, அவர் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்தால் மட்டுமே அது பணி சார்ந்த மரணமாக கருதப்படும்.

சென் ஜியாஜியா 10 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்து உயிரிழந்ததால், சுன்யீ நகர சமூகப் பாதுகாப்புத் துறை அவரது குடும்பத்தின் இழப்பீட்டு மனுவை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. பணி சார்ந்த மரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்நாட்டு சட்டப்படி குடும்பத்தினருக்குத் தீரா நிவாரணமாக கிடைக்க வேண்டிய சுமார் 1.1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.3 கோடி) இழப்பீட்டுத் தொகையும் பிற சலுகைகளும் தற்போது கிடைக்காமல் போயுள்ளன.

கணவரைப் பிரிந்து வாழும் சென் ஜியாஜியாவுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். "எங்கள் மகளைக் காப்பாற்ற 10,000-இல் ஒரு பங்கு நம்பிக்கை இருந்தாலும் நாங்கள் சிகிச்சையை நிறுத்தியிருக்க மாட்டோம். 48 மணி நேரத்திற்குள் அவர் இறக்கவில்லை என்பதற்காக அரசு இழப்பீடு வழங்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று அவரது தாய் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவின் வெய்போ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி தீயாய் பரவி வருகிறது. சட்டத்தில் உள்ள இந்த 48 மணி நேரக் கெடு, நோயாளியைக் காப்பாற்ற நினைக்கும் குடும்பத்தினரை இரக்கமற்ற முறையில் தண்டிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். "மருத்துவமனையில் இரவு பகலாக உழைத்த ஒரு அர்ப்பணிப்புள்ள செவிலியருக்குச் சமூகம் கொடுக்கும் மரியாதை இதுதானா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சட்டப்பூர்வ நிராகரிப்பை எதிர்த்து சென் ஜியாஜியாவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 

Leave a Reply