பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஷியோட் உருவாக்கிய 2.5 மீட்டர் உயரமுள்ள இந்த நையாண்டிச் சிலை, "ஆரஞ்சு பிளேக்" என்று அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கத் தலைவரை நிர்வாணமாக, ஒரு நீண்ட தங்கத் தடியைப் பிடித்தபடி, அவரை விட குள்ளமான ஒருவரின் தோள்களின் மீது அமர்ந்திருப்பது போலக் காட்டுகிறது.
இது 23 காரட் தங்கத்தால் பூசப்பட்டிருப்பதாக கலைஞர் கூறினார். இந்தச் சிலை 'அநீதியின் அரசன்' என்ற பெயராலும் அறியப்படுகிறது.
சிலைக்கு அருகில் உள்ள அட்டைகளில், "அநீதியின் அரசன்" சுமையால் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முதுகில் அமர்ந்திருக்கிறான் என்று விளக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உதவ நான் எதையும் செய்வேன். அவர் முதுகிலிருந்து இறங்குவதைத் தவிர என்று அந்த அட்டை தொடர்கிறது, மேலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பதற்காக டிரம்ப் மீது கலைஞர் குற்றம் சாட்டுகிறார்.
நாடாளுமன்றத்தின் இரண்டு கட்டிடங்களை இணைக்கும் சந்திப்பில் இந்த சிலை அமைந்துள்ளது. இது வியாழக்கிழமை வரை அங்கேயே இருக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலைஞரை அழைத்த, இடதுசாரி டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர் கிளாசென், டிரம்பின் சாத்தியமான எதிர்வினை குறித்து தாம் கவலைப்படவில்லை என்று கூறினார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தச் சிற்பம் காட்சிக்கு வைக்கப்படுவதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஒருவர் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்தால், உலக அரங்கில் அவருக்கு இடமில்லை என்று கிளாசென் கூறினார்.
அதேசமயம் பிற ஐரோப்பிய நகரங்களிலும், பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற COP30 ஐ.நா. பருவநிலை மாநாட்டிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சிலை குறித்து அமெரிக்க அதிபர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


