ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த 2-ந்தேதி திரைக்கு வந்த படம் ‘அன்பில் அவன்’. படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதையொட்டி நடந்த வெற்றி விழாவில் பிரீத்தி முகுந்தன் பேசியதாவது:-
நடித்ததில் மகிழ்ச்சி
‘அன்பில் அவன்’ படம் ஒரு சிறப்பான பயணமாக இருந்தது. இதுபோன்ற படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. நான் ஒரு பார்வையாளராக படத்தை திரையரங்கத்தின் நுழைவு வாயில் படிக்கட்டு அருகில் நின்று கொண்டே பார்த்தேன். பார்க்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. படம் அவ்வளவு நன்றாக இருந்தது என்றார்.
அசோக் செல்வன் பேசியதாவது:-
இந்த படம் அனைவருக்கும் ஆழமான படமாக இணைந்துள்ளது. படத்தை தியேட்டரில் இருக்கும் போதே போய் பாருங்கள். ‘அன்பில் அவன்’ படத்தை நான் பண்ணியதில் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. வாய்ப்புக்காக சுமார் 200 ஆடிஷன் சென்றிருப்பேன். திறமையான நடிகர்களுக்கு ஏன் சரியான இடம் கிடைக்கவில்லை என்று நான் நினைத்துள்ளேன். அதனால் நான் தயாரிப்பாளராக மாறும் போது அப்படிப்பட்ட திறமையான நடிகர்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இந்த படத்தில் சாத்தியமாகி உள்ளது. காதல் பண்ணியவர்களுக்கும், பண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும், பண்ண போறவர்களுக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து விழாவில் படத்தில் இடம்பெற்ற வசனத்தை காமெடிக்காக அசோக் செல்வனும், பிரீத்தி முகுந்தனும் நடித்து காட்டினார்கள்.
பிரீத்தி முகுந்தன்: நிஜமாகவே உனக்கு என்னை பிடிக்குமா சூர்யா?
அசோக் செல்வன்: இப்படி கேட்டா எப்படி? அதை உணர்வுப்பூர்வமாக கேட்டால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு இருவரும் நடத்திய உரையாடல் கலகலப்பாக அமைந்தது.


