பிரான்ஸில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, பாடசாலை மாணவர் ஒருவரின் கை வெடித்துச் சிதறி பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடசாலைக் கட்டடங்களின் சீரற்ற நிலை, வகுப்பறைகளில் அதிகரித்துள்ள நெருக்கடி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிராகப் பிரான்ஸ் முழுவதிலும் உள்ள மாணவர்கள் முன்னெடுத்த தீவிரப் போராட்டத்தின் போதே, பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு பிரெஞ்சு நகரமான லென்ஸில் (Lens) உள்ள அகஸ்டே பெஹால் (Auguste Béhal) மேல்நிலைப் பாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக உள்ளூர் ஆளுநர் பிரான்சுவா-சேவியர் லோக் (François-Xavier Lauch) உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்த மாணவனின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்ற போதிலும், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் பரஸ்பர முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கலவர தடுப்புக் காவல்துறையினரால் வீசப்பட்ட 'ஸ்டிங்-பால்' (sting-ball) கைக்குண்டை அந்த மாணவர் கையில் எடுக்க முயன்றபோதே அது வெடித்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனினும், சம்பவ இடத்தில் இருந்த மாணவி ஒருவர் கூறுகையில், அந்த மாணவர் கைக்குண்டைத் தொடவில்லை என்றும், அது நேரடியாக அவர் மீது மோதி வெடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரெஞ்சு காவல் விசாரணைப் பிரிவு சிறப்பு விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளது. கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த மாணவர் போராட்டங்கள், தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் பரவியுள்ளதால், பிரான்ஸ் முழுவதும் சுமார் 500 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 190 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகக் கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.


