பொதுச் சுகாதாரத் துறையின் முக்கிய பங்காளிகளான குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
புதிய குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் 1,056 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதன் போது மேலும் பேசிய அவர்,
மக்களுக்கு சுகாதார சேவைகளை அவர்களுக்கு அருகிலேயே வழங்குவதிலும், தாய் மற்றும் சேய் நலப் பாதுகாப்பிலும் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இலங்கையின் தடுப்பூசி திட்டங்களையும், சிசு மரண விகிதத்தைக் குறைப்பதிலும் குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் வழங்கும் பங்களிப்பு சர்வதேச ரீதியில் முன்னுதாரணமாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் அரச சேவையில் இணைக்கப்பட்டவர்களுடன் சேர்த்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,071 குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
“செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை” வேலைத்திட்டத்தின் கீழ், கருத்தரிப்பு முதல் முதுமை வரையிலான காலப்பகுதியில் மக்களுக்கு நெருக்கமான சுகாதார சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இதற்காக சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான பதவியுயர்வுகள், சம்பளம், பயிற்சி மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


