TamilsGuide

சவுதி தலைநகரில் பற்றி எரிந்த எண்ணெய் ஆலை - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி ஆதரவு அரச படைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி தலைநகர் ரியாத்தின் தெற்கே அமைந்துள்ள சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ நிறுவனத்தின் ஆலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், அந்த ஆலையிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்த்தியான புகையும் வெளியேறின.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு அந்த ஆலையைத் தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு, ரியாத்தில் உள்ள எண்ணெய் நிலையம் ஒன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் குறிவைக்கப்பட்டதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்தார்.

ஆனால் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக சவுதி அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த வாரம், சவுதியின் யான்பு பிராந்தியத்தில் உள்ள அராம்கோ நிறுவனங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா ஒரு புதிய தரைவழித் தாக்குதலைத் திட்டமிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடலின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் அல்-மண்டாப் ஜலசந்தியைக் கைப்பற்றி, கடலோரப் பகுதிகளிலிருந்து ஹவுகளை விரட்டியடிப்பதே சவுதியின் நோக்கமாகும்.

சவுதி வான்வழி ஆதரவுடன் ஏமன் அரச படைகள் மீது தரைவழித் தாக்குதலைத் தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு உளவுத் தகவல்களை வழங்க அமெரிக்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அது நேரடி இராணுவப் போரில் ஈடுபடாது என்று கூறப்படுகிறது.

Leave a comment

Comment