TamilsGuide

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி - எலான் மஸ்க்கின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர் செயலியை வாங்கி, அதனை எக்ஸ் என்று பெயர் மாற்றினார். மேலும் எக்ஸ் செயலிக்கு போட்டியாக இருந்து வரும் மெட்டா நிறுவனத்தை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார்.

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் செயலியை நிர்வகித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் செயலி, 3 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களை கொண்டு, உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இந்த தளத்தை ஃபேஷன், அழகு சாதன படைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், வணிக நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பரந்த அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து மாறுபட்டு, உரை அடிப்படையிலான கருத்துகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

எலான் மஸ்க் விமர்சித்ததை அடுத்து, இன்ஸ்டாகிராம் நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற உரை அடிப்படையிலான செயலியை எக்ஸ்-க்கு போட்டியாக தொடங்கியது.

இதைத்தொடர்ந்து எலான் மஸ்க், மெட்டா நிறுவனம் மீதும் இன்ஸ்டாகிராம் தளம் மீதும் விமர்சனங்களை வைத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், தான் இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கி விட்டதாக பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில், “இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது.

இது இயல்பாகவே பெண்களுக்கான ஒரு செயலி, எந்த பயனும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த பதிவிற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து எலான் மஸ்க் பதிவிட்ட இந்த பதிவு, சுமார் 18 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களிடம் இருந்து, ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

கடந்த மே மாதம் எலான் மஸ்க் வெளியிட்ட மற்றொரு பதிவில், “சில சமயங்களில் வளர்ந்த ஆண்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களை எனக்கு அனுப்புவார்கள், அப்போது நான், நீங்கள் பாலின மாற்றம் செய்யப்போகிறீர்களா? என்று கேட்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியை அதிகளவில் யார் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த தரவுகளில் இன்ஸ்டாகிராமை 52.7 சதவீதம் ஆண்கள் பயன்படுத்தி வருவதாகவும், 47.3 சதவீதம் பெண்கள் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆய்வு, நாட்டிற்கு நாடு மாறுபடும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் இன்ஸ்டாகிராம் செயலியை அதிகளவில் பெண்கள் பயன்படுத்தி வருவதாகவும், இந்தியாவை பொறுத்தவரையில் அதிகளவில் ஆண்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புள்ளிவிவரங்கள், பயனர்கள் தாங்களாகவே அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டது என்றும், மெட்டா தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தரவுகளும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment