TamilsGuide

இந்திய கேப்டனை கோடரியால் தாக்கிய ஓமன் விமானி - Flydubai சம்பவம் பயங்கரவாத செயல் என உறுதி செய்த ஐக்கிய அரபு அமீரகம்

நேற்று முன் தினம் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, கேப்டனான இந்திய விமானியை தாக்கியுள்ளார். இந்திய விமானி ரத்த வெள்ளத்தில் சரிய, ஓமன் விமானி விமானத்தை தன்னிச்சையாக இயக்க முயன்றுள்ளார்.

பயணிகள் மற்றும் பணியாளர்கள் தலையிட்டு ஓமன் விமானியை கட்டுப்படுத்தியுள்ளனர். ஆப் டியூட்டியில் இருந்த மற்றொரு விமானி விமானத்தை சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்திய விமானி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஓமன் விமானி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஃப்ளை துபாய் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, ​​விமானத்தின் காக்பிட்டிற்குள் துணை விமானி, அவசர கால கோடரியால் விமானியைத் தாக்கி, விமானத்தைக் கட்டுப்படுத்த முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் டாக்டர் ஹமாத் சைஃப் அல் ஷம்சி அறிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத தாக்குதல் என ஐக்கிய அரபு அமீரகம் முடிவுக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பதை விசாரிக்க ஒரு சிறப்பு அரசுத் தரப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

சம்பவத்தின் சூழ்நிலைகள், தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் பிற தொடர்புகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை முடிந்த பிறகு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரக விதிகள் படி, அனைத்து பெரிய வணிகரீதியான விமானங்களின் காக்பிட்டிற்குள், அவசர காலப் பயன்பாட்டிற்காகக் ஒரு 'கிராஷ் ஆக்ஸ்' எனப்படும் கோடாரி அல்லது இரும்பு நெம்புகோல் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமான சட்டமாகும்.

Leave a comment

Comment