அவசர சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாவிட்டால், நிலைமை மேலும் மோசமடையும் என்றும் கூறியுள்ளது.
காசாவின் சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 19 மட்டுமே பகுதியளவு செயல்படுகின்றன என்றும், எதுவும் முழுமையாகச் செயல்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கும் தொடர்ச்சியான பற்றாக்குறை நிலவுகிறது.
காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாலும், கட்டுப்படுத்தி வருவதாலும் மருத்துவப் பொருட்கள் வந்து சேர்வதில் தாமதங்கள் தொடர்கின்றன.
உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் செயற்கை உறுப்புகள் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் காசாவில் சுகாதார நெருக்கடியை மேலும் மோசமாக்குகின்றன என்று பாலஸ்தீனத்திற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரெய்ன்ஹில்ட் வான் டி வெர்ட் கூறினார்.
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில் செயற்கை உறுப்புக்கள் மற்றும் பிற உதவி சாதனங்கள் அடங்கிய ஒரு சரக்கு நான்கு முறை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு நிராகரிப்பும், ஒரு உறுப்பை இழந்து மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஒருவருக்கு ஏற்படும் தாமதத்தை மேலும் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
"தேவையான பொருட்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தால், அவை உயிர்களைக் காப்பாற்றாது. அதுதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மையான கேள்வி" என்று கூறிய வான் டி வெர்ட், மருத்துவப் பொருட்கள் தடையின்றியும், கணிக்கக்கூடிய வகையிலும் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்றும் மேலும் கூறினார்.
குளிர்காலம் தொடங்குவதால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. குளிர் மற்றும் வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சுமார் இருபது லட்சம் மக்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்கள் தேவைப்படுவதாக வான் டி வெர்ட் கூறினார்.
இதனிடையே நேற்று முன் தினம் மேற்கு காசா நகரப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.


