எரிபொருள் குறைந்த விலையில் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு யுத்த காலத்தில் நாம் பெரும் சவாலுக்கு முகங்கொடுத்தோம். எனினும், ஜனாதிபதியும் தலையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கி, சூழ்நிலையை மிகச் சிறப்பாகக் கையாண்டார்.
அதனால், உலகச் சந்தையில் டீசல் விலை 91சதவீதத்தால் அதிகரித்தபோது, எமது நாட்டில் அது 39.5சதவீத்தால் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. உலக சந்தையில் பெட்ரோல் விலை 80 சதவீத்துக்கும் அதிகமாக அதிகரித்தபோது, எமது நாட்டில் அது 41சதவீதத்தினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முறையில் எரிபொருள் குறைந்த விலையில் வழங்கப்பட்ட போதிலும், கூட்டுத்தாபனம் இவ்வருடம் 28 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது.
நாம் கடந்த வருடமும் 36 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பெற்றோம். இவ்வளவு இலாபங்கள் இருக்கும்போது எரிபொருள் விலை குறைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழக்கூடும்.
ஆனால், அந்த இலாபத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்காக கைவிடப்பட்டிருந்த ஆறு தாங்கிகளை நிர்மாணிப்பது உள்ளிட்ட 11 தாங்கிகளின் கொள்ளளவை சேர்த்தல், 90 வருடங்களுக்கு மேல் பழைமையான எமது எரிபொருள் நிரப்பும் பிரிவை நவீனமயமாக்கி முத்துராஜவெல போன்ற கென்ட்ரி கட்டமைப்பை நிர்மாணித்தல்.
அத்துடன் துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரை எரிபொருளை இறக்குவதற்காக இரண்டு புதிய குழாய்களை அமைத்தல், கட்டுநாயக்க வரை ஜெட்- எ1 எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக புதிய குழாய் வழித் தடத்தை அமைத்தல் உள்ளிட்ட குழாய் கட்டமைப்பை முறைப்படுத்துதல்.
மேலும் புதிய குழாய்வழித் தடங்களைப் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அந்த இலாபத்தைப் பயன்படுத்தி நாங்கள் செயற்படுத்தி வருகிறோம். எனவே அதன் பயனை மீண்டும் மக்களுக்கே வழங்கியுள்ளோம்.” என தெரிவித்தார்.


