TamilsGuide

டுபாய்–டெல் அவிவ் விமானக் கடத்தல் முயற்சி - திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என ஐக்கிய அரபு அமீரகம் தகவல்

டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற “ஃபிளை துபாய்” விமானத்தை கடத்த முயற்சி செய்த சம்பவம் திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஓமனைச் சேர்ந்த துணை விமானி விமானத்தை கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்திய விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்டோர் மேற்கொண்ட நடவடிக்கையால் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், விமானம் சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 174 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கார்கேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமானக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் தீவிரவாத சதி இருப்பதாக சந்தேகிப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாஆர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் ஈரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment