TamilsGuide

அமெரிக்கத் தடைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவூட்டல்

அமெரிக்கா விதித்துள்ள இரண்டாம் நிலை (Secondary) தடைகள் தொடர்பாக இலங்கைக்கு தனிப்பட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்பட்டால் இலங்கைக்கு தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து பல்வேறு விசாரணைகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் என்பது உலகளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள அதன் பொதுக் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்றும், அவை இலங்கை அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே இலக்காகக் கொண்டவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஆகஸ்ட் 24 ஆம் திகதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட இந்தத் தடைகளின்படி, அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு சேவைகள் வழங்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் அமெரிக்க நிதி அமைப்பிற்கான அணுகலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு திறந்தவெளியில் கிடைக்கக்கூடியவை என்றும், குறிப்பாக கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகக் கப்பல் துறையில் உள்ளவர்கள் இதுகுறித்து நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இவ்வகையான கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் மட்டுமன்றி உலகின் பிற கடற்பரப்புகளிலும் காணப்படுவதாகவும், தற்போதைய மோதல் சூழ்நிலையால் இத்தகைய அமெரிக்க இரண்டாம் நிலைத் தடைகள் உலகளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தின் உணர்வுபூர்வ தன்மையைக் கருத்தில் கொண்டு ஊடகங்கள் உண்மைகள் மற்றும் தரவுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் ஈரானைச் சேர்ந்த சுமார் 20 காலி எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றில் பல கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டிருந்தது. 

ஈரானைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்னெடுத்துள்ள புதிய ‘அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையின்’ மிகத் தெளிவான விளைவாக இவை அமைந்துள்ளன. 

பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட எண்ணெயைச் சீனாவுக்குக் கடத்தும் மறைமுக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த, ஈரானுக்குச் சொந்தமான அல்லது ஈரானுடன் தொடர்புடைய டஜன் கணக்கான எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் , ஜூலை மாதம் முதல் ஆசிய நாடுகளான இலங்கை மற்றும் மலேசியாவுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் சிக்கிக்கொண்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை மீண்டும் அமல்படுத்தியதிலிருந்தே இச்சூழ்நிலை நிலவுகிறது.
 

Leave a comment

Comment