கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ மாவட்டப் பள்ளிச் சபை உட்பட நான்கு பள்ளிச் சபைகள் மற்றும் இரண்டு ஆசிரியர் சங்கங்களுக்கு எதிராக 12 யூத ஆசிரியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தங்களது மதம், இன தோற்றம் மற்றும் வம்சாவளி காரணமாகத் தங்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டதாகவும், பாடசாலைகளில் இடம்பெற்ற யூத எதிர்ப்பு சம்பவங்கள் குறித்துப் புகாரளித்ததற்காகத் தங்களை நிர்வாகமும் சங்கங்களும் தண்டித்ததாகவும் அந்த ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆசிரியரும் பாகுபாட்டிற்காக 150,000 கனடிய டொலர்களை இழப்பீடாகவும், உளவியல் ஆலோசனைகளுக்கான கட்டணத்தையும் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காத்ரின் மார்ஷல் தெரிவிக்கையில், பாடசாலைகளில் மிக மோசமான யூத எதிர்ப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் மேஜைகள் மற்றும் கரும்பலகைகளில் 'சுவஸ்திகா' குறியீடுகள் வரையப்பட்டிருந்தமை. இடைவேளையின் போது மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் ஹிட்லரைப் போற்றிப் பாடும் பாடல்களைப் பாடியமை.
யூத இனப்படுகொலை மற்றும் அதன் வரலாறு பற்றிய புத்தகங்களை வழங்குவது மத்திய கிழக்கு மோதலுக்கு நிதியைத் திரட்டுவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படலாம் என ஆசிரியர்களிடம் கூறப்பட்டமை.
இவ்வாறான சம்பவங்கள் குறித்துப் புகாரளித்த போது, பள்ளி நிர்வாகமும் சங்கங்களும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஆசிரியர்களையே 'அரசியல் சர்ச்சைகளை உருவாக்குபவர்கள்' எனக்கூறி கண்டித்ததாக வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.


