TamilsGuide

திலீபன் நினைவேந்தல் விவகாரம் - யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு வந்த வழக்குகள்

தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கிலும் தியாக தீபத்தை நினைவேந்துகின்ற இடத்தில் இருந்து காவல்துறையினரால் எடுத்துச்செல்லப்பட்ட ஒலிப்பதிவு சாதனங்கள் தொடர்பான வழக்கிலும் சந்தேக நபர்களாக எவருடைய பெயரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்று சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (02) இடம்பெற்ற விடயம் தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கும் தியாக தீபத்தை நினைவேந்துகின்ற இடத்தில் இருந்து காவல்துறையினரால் அடாத்தாக எடுத்துச்செல்லப்பட்ட ஒலிப்பதிவு சாதனங்கள் தொடர்பான வழக்கும் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலே அழைக்கப்பட இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவும் காவல்துறையினர் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு சிலருக்கும் வழங்கிய தகவலின் பிரகாரம் எங்களுக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

அந்த அடிப்படையில் முன்னிலையாவதற்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தோம். ஆனால் வழக்கு அழைக்கப்பட்ட சமயம் சந்தேக நபர்களாக எவருடைய பெயருமே அதில் குறிப்பிடப்பட்டிருக்கவுமில்லை, அழைக்கப்பட்டிருக்கவுமில்லை.

அத்துடன் ஒலிபெருக்கி, ஒலிப்பதிவு சாதனங்கள் தொடர்பாகவும் யாரும் வழக்கிலே அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அந்த வழக்கில் நாங்கள் எந்த விண்ணப்பங்களையும் செய்யவில்லை.” என தெரிவித்துள்ளார். 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் இலங்கை காவல்துறையினர் தாக்கல் செய்த இரண்டு வழக்குகள் இன்று (02) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நினைவேந்தலில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தியமை மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற போது  உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணம் காவல்துறையினர் அகற்றி சென்றுள்ளனர்.

அத்துடன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச் சிலையை கடந்த 27ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் காவல்துறையினர் அகற்றிச் சென்றிருந்தனர்.

இதேவேளை திலீபனின் திருவுருவச் சிலையை காவல்துறையினர் அகற்றிச் சென்றமைக்கு எதிராக நல்லூரில் அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (30) மாலை 5 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் இன்று (02) மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வரவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment