TamilsGuide

ஈரான் விவகாரம் - மத்திய கிழக்குக்கு மேலும் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்பும் அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலும் ஒரு வானூர்தி தாங்கி போர்க்கப்பலை அனுப்ப பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 'யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்' (USS Theodore Roosevelt) கப்பல் உள்ளடங்கிய தாக்குதல் குழு அமெரிக்காவின் சான் டியாகோ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக 'வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 9,000 முதல் 10,000 இராணுவ வீரர்களைக் கொண்ட இத்தாக்குதல் குழு, எதிர்வரும் நவம்பர் மாதம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக்கப்பல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள கப்பலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுமா அல்லது அமெரிக்க இராணுவப் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறதா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது 'யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்' (USS George H.W. Bush) மற்றும் 'யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வொஷிங்டன்' (USS George Washington) ஆகிய இரண்டு அமெரிக்க . வானூர்தி தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment