நேற்று(01.10.2026) பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் லிந்துலை நுவரெலியா மெராயா தமிழ் மகா வித்தியாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்று(02.10.2026) பாடசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறி்தத பாடசாலையின் அதிபர் கிருஷ்ணராஜா கருத்து தெரிவிக்கையில். நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் ஒன்றின் கீழ் இயங்கும் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாடசாலை சுற்றுப்புறம் மற்றும் வகுப்பறைகள், கணினி அறை, பிரதான மண்டபம் உட்பட அனைத்திலும் வெள்ள வெள்ள நீர் கடுமையாக தேங்கியுள்ளது.
தற்போது காணப்படும் சேறு கலந்த மண் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு தற்காலிகமாகப் பாடசாலையை மூடுவதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலையை முழுமையாக மூடி சுகாதார நடைமுறைப்படி சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னர் மீண்டும் பாடசாலை வழக்கம் போல் திறக்கப்படும் எனவும் இது தொடர்பில் நுவரெலியா கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பாடசாலையின் அதிபர் இதனை தெரிவித்தார்.
மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் கடுமையான சீரற்ற காலநிலையின் போது எமது பாடசாலை வளாகத்தில் அடிக்கடி இவ்வாறு மழை வெள்ளத்துடன் சேர்த்து சேறு, சகதி ஏற்படுவதால் குறித்த பகுதியில் கால்வாய்களை சரிவர செய்து தருமாறு பாடசாலையின் அதிபர் கோரிக்கை ஒன்றையும் எடுத்துள்ளார்.


