Photographer spotted near Archie and Lilibet's school: இளவரசர் ஹரியின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி அருகே சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்படக்கலைஞர் காணப்பட்ட விடயத்தை ஹரி மேகன் தரப்பு கண்டித்துள்ளது.
தானும் மன்னரின் மகனான இருந்தும், தனக்கும் தன் குடும்பத்துக்கும் சரியான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்னும் கோபம் இளவரசர் ஹரிக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது.
ஆகவேதான், அவர் பிரித்தானியாவுக்கு தன் குடும்பத்தை அழைத்துவரத் தயங்கினார்.
இந்நிலையில், பிரித்தானியா திரும்பியுள்ள ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளுடைய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.
இளவரசர் ஹரி, தன் பிள்ளைகளை பிரித்தானிய பள்ளி ஒன்றில் சேர்த்த நிலையில், சில நாட்களுக்குள் அவர்களை வேறொரு பள்ளிக்கு மாற்றிவிட்டார்.
அதாவது, பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது. அவர்கள் பயணிக்கும் பாதையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதனால், அவர்கள் பயணிக்கும் வேன் சாலையில் வெகு நேரம் நிற்க நேர்ந்துள்ளது. ஆகவே, தன் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சிய ஹரி, தன் பிள்ளைகளை வேறொரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.
இந்நிலையில், இப்போது ஹரியின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் அருகே, முதுகில் பை மாட்டிய இரண்டு மர்ம நபர்கள் நடமாடியுள்ளார்கள்.
அவர்கள், பல இடங்களிலிருந்து பள்ளிக்குள் எட்டிப் பார்ப்பதை பள்ளி அலுவலர்களும், தனியார் பாதுகாவலர்களும் கவனித்துள்ளார்கள்.
பின்னர், அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதும், அவர்களில் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்படக்கலைஞர் என்பதும் தெரியவந்துள்ளது.
பொதுவாக, பிரபலங்களை புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களை ஊடகங்களுக்கு விற்று காசு பார்க்கும் பாப்பராசிகள் என அழைக்கப்படும் தனியார் புகைப்படக்காரர்கள்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவார்கள்.
ஹரியின் தாயான இளவரசி டயானாவை இந்த பாப்பராசிகள் காரில் துரத்தியதால்தான் அவரது கார் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்படக்கலைஞர் ஒருவரே, பள்ளி ஒன்றின் அருகே புகைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை ஹரி, மேகன் தரப்பு கண்டித்துள்ளது.
இது ஏற்றுக்கொள்ளத்தகாத செயல் என கண்டித்துள்ள ஹரி, மேகன் தம்பதியரின் செய்தித்தொடர்பாளர், இது பிள்ளைகளின் தனியுரிமையை மீறும் விடயம் என்றும், பொறுப்பற்ற செயல் என்றும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகள் பிரித்தானியாவில் தங்குவதற்காக வராமல், இங்கேயே வாழ வந்துள்ளதால், அவர்களுடைய பாதுகாப்பு குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, ராஜ குடும்ப மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் அமைப்பான The Royal and VIP Executive Committee (RAVEC) என்னும் அமைப்பு, ஹரி குடும்பத்தின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு மேற்கொண்டுவரும் நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


