TamilsGuide

Flydubai விமானத்தில் அசம்பாவிதத்தை தடுத்த பயணியை சந்தித்த பிரதமர் நெதன்யாகு

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையைத் தொடர்ந்து, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந் நிலையில் விமானம் நடுவானில் ஆபத்தான நிலையில் சிக்கியபோது தலையிட்டு விமானியொருவரை கட்டுப்படுத்த உதவிய பயணி யானிவ் ஹயூனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துள்ளார்.

பின்னர் பயணிகள் பாதுகாப்பாக இஸ்ரேலுக்குத் திரும்பிய நிலையில், பென் குரியன் விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. விமானம் இஸ்ரேலை நெருங்கிக் கொண்டிருந்தபோது, துணை விமானி ஒருவர் பிரதான விமானியை கத்தியால் தாக்கியதாகவும், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் தலையிட்டு விமானத்தை கீழ்நோக்கி செலுத்த முயன்றதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரத்தை இழந்தது. இதன்போது யானிவ் ஹயூன் மற்றொரு பணியாளர் ஒருவருடன் இணைந்து விமானியின் அறைக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விமானியை கட்டுப்படுத்த உதவியுள்ளார்.

நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது, விமானியின் அறைக்குள் நுழைந்தபோது காயமடைந்த விமானி கதவுக்கு அருகில் இருந்ததாகவும், மற்றைய விமானி கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு அருகில் இருந்ததாகவும் யானிவ் தெரிவித்தார்.

அவர் அந்த நபரை கட்டுப்பாட்டு அமைப்புகளிலிருந்து அகற்றியதுடன், விமானம் தீவிரமாக கீழ்நோக்கிச் சென்றபோது மீண்டும் விமானியின் அறைக்குள் சென்று கட்டுப்பாடுகளை நிலைநிறுத்த உதவியதாக கூறினார்.

யானிவ் மற்றும் ஏனைய பயணிகள் மற்றும் பணியாளர்களின் துணிச்சலை நெதன்யாகு பாராட்டியதுடன், அவர்களின் நடவடிக்கைகள் பெரும் அனர்த்தத்தைத் தவிர்க்க உதவியதாக தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இந்திய பிரஜையான பிரதான விமானி ஸ்மித் மச்சார், காயமடைந்த நிலையிலும் விமானியின் அறைக் கதவைத் திறக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகளும் பணியாளர்களும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய விமானியை கட்டுப்படுத்த முடிந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் விமானி சவுதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
 

Leave a comment

Comment