TamilsGuide

அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம் - 1 பில்லியன் டொலர் இறக்குமதிக்கு டிரம்ப் அரசு தடை

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அமுலுக்கு வந்துள்ள இந்தத் தடை உத்தரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவை மேலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 880 பில்லியன் டொலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தைக் கொண்டுள்ள இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியைச் சுமத்தியது.

அதற்குப் பதிலடியாக, "கனடியத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமெரிக்க வரிகளுக்கு இணையான வரிகள் விதிக்கப்படும்" என அறிவித்த கனடியப் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஏற்றுமதிகள் மீது 15%, 25% மற்றும் 50% வரிகளை விதித்தார்.

கனடாவின் இந்த பதிலடி நடவடிக்கைக்குத் தண்டனை அளிக்கும் வகையிலேயே டிரம்ப் நிர்வாகம் தற்போது இந்த 1 பில்லியன் டொலர் இறக்குமதித் தடையை அமல்படுத்தியுள்ளது. 
 

Leave a comment

Comment