TamilsGuide

கனடிய கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் பதவி விலகினார்

கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது நாடாளுமன்றப் பதவி விலக உள்ளதாக அவரைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம், கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரெவின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் 8ஆவது உறுப்பினராக அவர் மாறவுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றி வரும் எட்சிகன், பிற வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் நோக்கில் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது ராஜினாமா முடிவை எட்சிகன் கடந்த வாரமே கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரெவிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவரின் பதவி விலகல் குறித்தான ஊகங்கள் செவ்வாய்க்கிழமை 'தி ஹில் டைம்ஸ்' பத்திரிகையில் முதன்முதலில் வெளியாகியிருந்தன.

2019 ஆம் ஆண்டு முதல் 'பாரி சவுண்ட்-முஸ்கோகா' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக எட்சிகன் பதவி வகித்து வருகிறார்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைத்துவத் தேர்தலில் போட்டியிட்டு பியர் பொய்லிவ்ரெவிடம் தோல்வியடைந்திருந்தார்.

கூட்டாட்சி அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் 2014 முதல் 2019 வரை ஹன்ட்ஸ்வில் நகராட்சியின் மேயராகப் பணியாற்றினார். கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரெ கட்சிக்குள்ளேயே தலைமைத்துவக் கேள்விகளைச் சந்தித்து வரும் நிலையில், எட்சிகனின் இந்த திடீர் முடிவு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இலையுதிர் காலத்தில் இருந்து பொய்லிவ்ரெவின் அணியிலிருந்து மேலும் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.

அதேவேளை, அண்மைய கருத்துக் கணிப்புகளிலும் கன்சர்வேடிவ் கட்சி பின்னடைவையே சந்தித்து வருகிறது. 'நானோஸ் ரிசர்ச்' அமைப்பின் அண்மைய கருத்துக் கணிப்பின்படி, லிபரல் கட்சி 49.9 சதவீத ஆதரவையும், கன்சர்வேடிவ் கட்சி 27.9 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளன.  

Leave a comment

Comment