ஓமனில் முட்டையிடுவதற்காக கரைக்கு வந்த கடல் ஆமையின் மீது அமர்ந்ததாகக் கூறப்படும் உக்ரைனைச் சேர்ந்த உடற்பயிற்சி சமூக ஊடகப் பிரபலத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
32 வயதான வடிம் ஒலெய்னிக் என்பவரே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓமனின் பாதுகாக்கப்பட்ட கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் ஒன்றான ராஸ் அல் ஜின்ஸ் பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், கடல் ஆமை நகர்ந்து செல்ல முயற்சிக்கும் நிலையில், அதன் ஓட்டின் மீது ஒலெய்னிக் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
அத்துடன், அவர் கையில் சிறிய கடல் ஆமைக்குஞ்சு ஒன்றையும் வைத்திருப்பது காணப்படுகிறது.
ஆமை தொடர்ந்து நகர்ந்த நிலையில், ஒலெய்னிக் ஒருமுறை கீழே வழுக்கி விழுந்த பின்னர் மீண்டும் அதன் மீது ஏறி அமர்ந்து, அதனை காணொளியாகப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவருடன் இருந்ததாகக் கூறப்படும் உக்ரைனைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒலெனா கிராவ்சென்கோவும் அதே கடல் ஆமையின் மீதும் அமர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இத்தாலியைச் சேர்ந்த ‘Biologicamente’ என்ற கடல் உயிரினப் பாதுகாப்புத் திட்டமும் இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கடல் ஆமைகள் காட்டுயிரினங்கள் என்பதால், அவற்றைத் தொடுவதோ அல்லது புகைப்படங்களுக்காகப் பயன்படுத்துவதோ கூடாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, வடிம் ஒலெய்னிக் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும், ஓமன் சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்புடன் தொடர்புடைய அமைப்பு ஒன்றிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


