TamilsGuide

கனடா பிரதமருக்கு கொலை மிரட்டல் - கியூபெக் நபர் கைது

கனடாவின் பிரதமர் மார்க் கார்னிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ், கியூபெக் நகரைச் சேர்ந்த 45 வயதான உஸ்மான் பா என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், ஒருவருக்கு மரணம் அல்லது உடல் ரீதியான தீங்கை விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் வெள்ளையின மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு வெறுப்பைத் தூண்டும் வகையில் செயற்பட்டமை ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உஸ்மான் பா தனது ஃபேஸ்புக் கணக்கில் இந்த மிரட்டல் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாகவோ அல்லது இணையவழியிலோ மரணம் அல்லது உடல் ரீதியான தீங்கை விளைவிக்கும் நோக்கில் விடுக்கப்படும் எந்தவொரு மிரட்டலும் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு குற்றவியல் குற்றமாகும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் கடந்த ஜூலை 6 ஆம் திகதி இது தொடர்பான விசாரணையைத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24 ஆம் திகதி கியூபெக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உஸ்மான் பா, அக்டோபர் 1 ஆம் திகதி தனது அடுத்த வழக்கு விசாரணை வரை தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரை மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் பிரதமர் மார்க் கார்னிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் மார்க்-ஆண்ட்ரே போலியர் என்ற கியூபெக்கைச் சேர்ந்த மற்றொரு நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment