TamilsGuide

பந்துலு அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்து தன் நன்றிக்கடனை பூர்த்தி செய்த மக்கள் திலகம் 

சொந்த வாழ்க்கையில்  ஒரு மாதிரியாகவும், பொது வாழ்வில் வேறொரு மாதிரியாகவும் பொய் முகத்தை வைத்துக் கொண்டு பகல் வேஷம் போடும் கபடவேடதாரிகள் நம்மில் பலருண்டு. அதிலும் அரிதாரம் பூசும் நடிகர்களிடத்திலும், அவதாரப், புருஷர்களாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளிடத்திலும் இந்த குணம் நிறையவே உண்டு. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மனதில் வைத்துத்தான் “இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம்” என்று பாடல் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். (பிறகு சென்சார் இவ்வரிகளுக்கு அனுமதி மறுத்தபோது “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்” என்று மாறிப்போனது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவரது உன்னத குணம் போற்றுதலுக்குரியது. குணத்தில் குன்றாகத் திகழ்ந்தவர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத வண்ணம்’  என்பார்களே அதுபோன்ற ஒரு நாகரிகத்தைப் பேணிக்காத்தவர். ரவீந்தரின் எழுத்துகள் வாயிலாக இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களை நாம் அறியும்போது நம்மையும் அறியாமல் அந்த மாமனிதர் மீது நமக்கு ஓர் அளப்பரிய மரியாதை உண்டாகி விடுகிறது.madurai 1பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் படநிறுவனம் தொடங்கி அனைத்து மொழிகளிலும் 57 படங்கள் தயாரித்து இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. இவர் சிவாஜியை வைத்து தயாரித்த “கப்பலோட்டிய தமிழன்”, “கர்ணன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்” போன்ற படங்கள் சரித்திர சாதனை நிகழ்த்தியது. அதேபோன்று எம்.ஜி.ஆரை வைத்து அவர் தயாரித்த படங்கள் “ஆயிரத்தில் ஒருவன்”, “ரகசிய போலீஸ்-115”, “நாடோடி”, “தேடி வந்த மாப்பிள்ளை” போன்ற படங்கள் நன்றாக ஓடின. ஜெயலலிதாவை கன்னடத்தில் தான் இயக்கிய “சின்னாட கோம்பே” என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (அவரை படவுலகுக்கு அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர் என பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்)
பந்துலு
பி.ஆர்.பந்துலு
பி.ஆர்.பந்துலு தாயாரித்து இயக்கிக் கொண்டிருந்த படமான “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” துவக்க நாளின்போது நடைபெற்ற ஒரு உருக்கமான நிகழ்வை ரவீந்தர் வருணிக்கிறார். எம்.ஜி.ஆரிடம் காணப்பட்ட மனிதாபிமானத்தையும், அவர் எத்தகைய தாராள மனம் படைத்தவர், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்பதையும் நிரூபணமாக்கும் சம்பவம் இது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒப்பனை அறையில் இருந்தபோது பந்துலு உள்ளே வருகிறார். பொதுவாகவே பந்துலு வந்தாலே எம்.ஜி.ஆர் எழுந்து நின்று மரியாதை அளிப்பது  வழக்கம்.  காரணம் எம்.ஜி.ஆரை விட அவர் ஏழு வயது மூத்தவர். அன்றும் அவ்வாறே அவர் எழுந்து நிற்க, பந்துலு அவரை அமரச்சொல்லி சைகை காட்டுகிறார். “தம்பி, உங்களை வைச்சு இப்ப படம் எடுக்கிறேன். இதுவரை  நஷ்டமேதும் இல்லாம மூணு, நாலு படம் எடுத்துட்டேன். இது என் இலட்சியப் படம். இந்த படத்தோட வெற்றியையும் நான் பார்த்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதுக்கு நீங்க தான் ஒத்துழைப்புத் தரணும்” என்று உருக்கமாகக் கூறினார். உணர்ச்சி வசப்பட்ட மக்கள் திலகம், ஒப்பனை நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பந்துலுவை அப்படியே அணைத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “அண்ணே இந்த மாதிரி அவச்சொல் எல்லாம் உங்க வாயாலே வரவேக்கூடாது.” “என்னமோ தம்பி. நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது” என்றார் பந்துலு “அப்படிச் சொல்லாதீங்கண்ணே. நீங்க நீண்டகாலம் வாழணும் , எத்தனை படம் வேணும்னாலும் எடுங்க . என்னால முடிஞ்ச உதவியை செய்றேன் . இந்தப் படத்துக்கு எத்தனை நாள் கால்ஷீட் தேவைப்படும்? எப்பப்ப வேணும்னு சொல்லிட்டா நான் மத்த எல்லா படத்தையும்  இப்ப இருக்குற கட்சி வேலைகளையும் நிறுத்திட்டு இத மொதல்ல முடிச்சு  தர்றேன்” என்கிறார்  மக்கள் திலகம் “இது என் கடைசி படமாக இருந்தாலும் இருக்கும். இது நல்லா பிரமாண்டமா இருக்கணும்.” ‘யாருக்கு இது கடைசிப் படம்னு அவனல்ல  தீர்மானிக்கணும். நீங்க போய் ஷாட் வைங்க , இதோ வந்துட்டேன் ” என்று அவரைத் தேற்றுகிறார் மக்கள் திலகம். (இருவருக்கும் அதுதான் கடைசிப் படம் என காலம் நிர்ணயத்திருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை) பந்துலு சொன்னது போலவே அவர் வாக்கும் பலித்தும் போகிறது. ஆம். படத்தை முடிக்க பணம் புரட்டப் போன பந்துலு பெங்களூரிலேயே காலமாகிப் போகிறார். அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா கிருஷ்ணசாமியை அழைத்த மக்கள் திலகம் ” பந்துலு சாருக்கு நீங்க நெருங்கிய நண்பர் , இந்தப் படத்தை நான் எப்படியாவது முடித்தே ஆகணும் , அவர் எப்படி எல்லாம் எடுக்க நினைத்தாரோ அப்படி எடுக்க நினைக்கறேன் . அதை முடிக்க ஒரு தயாரிப்பாளரை நீங்களே கொண்டு வாங்க ” என்கிறார் “அந்தப் படத்துக்கு மட்டுமல்ல, பந்துலு சாருக்கும் என் காணிக்கையை அவுங்க பேசிய சம்பளத்தில் பாதி.  பந்துலு சார் டைரக்ட் செய்ய இருந்தாங்க . இப்ப அவர் இல்லே . அதனாலே டைரக்ஷன் வேலையை நானே பார்த்துக்கறேன்.  எனக்கு ஒண்ணும் வேணாம்” என்றும் சொல்கிறார் மக்கள் திலகம் . படத்தை செலவில்லாமல் சென்னையிலேயே எடுக்கலாம் என்று சொன்ன போது “வேணாங்க , ஜெய்ப்பூர் பந்துலு சார் தாய் வீடு . அந்த ஊரை நம்ம நாட்டுக்கு தெரிய வைச்சவங்க அவுங்க . அங்கேயே போய் எடுக்கலாம் ” என்கிறார் மக்கள் திலகம். அங்கேயே காட்சிகளும் படமாக்கப் பட்டது. இத்தனைக்கும் அப்பொழுது 1976 தேர்தல் களம். அரசியல் பரபரப்பு வேற.  அதற்கிடையிலும் ஓய்வேயில்லாமல் பெரியவர் பந்துலு அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்து தன் நன்றிக்கடனை பூர்த்தி செய்கிறார் மக்கள் திலகம் . படமும் முடிந்தது , தேர்தலும் முடிந்தது . டப்பிங் வேலை  மட்டும் முடியாமல் இருந்தது . கட்சியின் வெற்றிக்கு பிறகு மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப் பட்டு பதவி ஏற்க வேண்டும் , நாடே எதிர்பார்த்து இருந்த சூழலில் , பதவியேற்பை சில நாட்கள் தள்ளிப் போட்டார் மக்கள் திலகம் . “மதுரையை  மீட்ட சுந்தர பாண்டியன்” உட்பட மூன்று படங்களின் டப்பிங் வேலையை முடித்துக் கொடுத்தார் … பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னர் , “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” டப்பிங் வேலை முடிந்தது , மைக்கை தொட்டு முத்தமிட்டார் மக்கள் திலகம் , இரவு 11 மணிக்கு வாகினி டப்பிங் தியேட்டருக்கு வெளியே வந்தார் மக்கள் திலகம் நிலத்தை தொட்டு முத்தமிட்டார்.  பணியை முடித்த பெருமிதத்தில் நிம்மதியடைந்தார். ரவீந்தர் எடுத்துரைக்கும்மேற்கண்ட  இச்சம்பவத்தின் மூலம் எம்.ஜி.ஆர். என்ற உன்னத மனிதரின் உயர்ந்த குணத்தை அறிந்து மனம் நெகிழ்ந்து போகிறோம் நாம். .m.g.r, indraரவீந்தரின் “பொன்மனச் செம்மல்” நூலில் காணப்படும் சில சுவையான செய்திகள் ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு செய்தி திருமதி  காந்தி அவர்களைப் பற்றியது. எம்.ஜி.ஆர். என்ற தனியொரு மனிதருக்காக அவர் சட்டத்தையே மாற்றியமைத்தார் என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா? இதோ ரவீந்தரின் வார்த்தைகளிலேயே அதனை பார்ப்போம். 1979-ஆம் ஆண்டு பொன்மனச் செம்மலின் ஆட்சியைக்  கலைத்த இந்திரா காந்தி அம்மையார், எம்.ஜி.ஆ ருக்காக  ரிசர்வ் வங்கியின் சட்டத்தையே  மாற்றி அமைத்தார் என்றால், அது செம்மல் ஒருவருக்கே சாத்தியப்படும் … நடப்புக்கு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். நெல்லுக்குல்தான் அரிசி.அது பிரிந்து விட்டால் ஒட்டாது. அப்படிதான் நட்பும் என்று. அதையும் முறியடித்தார் செம்மல். இரண்டாவது முறை மக்களால் அரியணையில் அமர்ந்த பிறகு அன்னை இந்திரா, செம்மல் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்தார். மோதல் இருந்த போதும் சஞ்சய் காந்தி இறந்த பொழுது, இரங்கல் தெரிவிக்க சென்ற செம்மலின் உன்னத குணத்தை அறிந்தார். தமிழகம் தன் நட்பில் இல்லையென்றால் தென்னகமே தன்னாட்சிக்குள் இருக்கத் தகுதியில்லை என நினைத்து, செம்மலுக்கு ஒரு தாயானார். தாய் தோழியானார் . செம்மல் சொல்லையும் கேட்டார்.
MGR During Sanjay funeral
சஞ்சய் காந்தி இறுதி ஊர்வலத்தின்போது எம்.ஜி.ஆர்.
1984 ம் ஆண்டு செம்மல் வாதநோயால் பாதிக்க பட்டு இருந்தபொழுது, அன்னை இந்திரா செம்மலின் உடல் நிலை அறிந்து பறந்து வந்தார். ஒரு நாட்டுப் பிரதமர் உடனே பறந்து வந்து பார்த்தது பெரிய விஷயம். செம்மலின் அருகே செல்ல மருத்துவர்கள் தடை விதித்திருந்ததால், அவர் இருக்கும் கருப்புக் கண்ணாடி அறையில், சிறு வெள்ளைக் கண்ணாடி வழியாக பார்த்தார்.  பார்த்துவிட்டு அன்னை கேட்ட முதல் கேள்வி “இவர் எம்.ஜி.ஆரா?” என்பதுதான். திருமதி ஜானகி அம்மாளுக்கு இந்திரா ஆறுதல் சொன்னார். அமெரிக்கா போக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். மேலும் “ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி சட்டம் தளர்த்தப்படும், எவ்வளவு செலவானாலும் இந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் அவரது தர்மமே அவரைக் காக்கும், உங்கள் பிரார்த்தனையும், என் பிராத்தனையும், வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிராத்தனையும் அதில் ஒன்றாவது பலிக்காமலா போகும்” என்று ஜானகியம்மாவை கட்டிப் பிடித்து கண்களைத் துடைத்தார் அன்னை. அதன் பிறகு செம்மல் பிரச்சாரத்துக்கு செல்லாமலே முதல்வர் ஆனது தனி வரலாறு …. இந்திரா காந்திக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடைபெற்ற மோதல்கள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்ற நம்மை அவர்களிடையே இருந்த இதுபோன்ற நல்லுறவு, பெருந்தன்மை போன்றவற்றை ரவீந்தரின் எழுத்துக்கள் மூலமாகவே நாம் அறிய முடிகின்றது. தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை குணத்தில் குன்றாக விளங்கிய,  தலைசிறந்த ஒரு மாமனிதரோடு தன் நாட்களைக் கழித்தவர் ரவீந்தர்.  தன் சொந்த வாழ்வில் தனக்கேற்பட்ட அனுபவத்தை உணர்ச்சி பெருக்கால் சுவைபட இவ்வாறு வடிக்கிறார் ரவீந்தர்.
எனக்கு 1958-ஆம் ஆண்டில் திருமணம் நிச்சயமாகியிருந்தது .  ‘நாடோடி மன்னன்’  வெளி வரும் வரை  சற்று பொறுத்திரும்.  பிரமாதமாகச் செய்யலாம்  என்றார் . படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணி என்னை அழைத்து , “என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம்? ”  என்று கேட்டார். அதற்கு நான், “தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் ” என்று சொன்னதும் ” சந்தோசம்,  எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் ” நான் “பதினாறு ரூபாய் வேண்டும்” என்று சொன்னேன் .பெரியவரும்,  சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் … பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் “ரவீந்தர், நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது  குறைச்சு தரலாமா ?” என்று கேட்டார் நான் புரிந்துக் கொண்டு “பதினாறாயிரம் கேக்கலே, வெறும் பதினாறு ரூபாய் தான்” என்றுச் சொன்னேன். கலகலவென்று சிரித்து “என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம்? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே? ” என்று கேட்டார். “எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும், மத்தப்படி  உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் ” என்றேன் . “அப்படியா இரும் கொண்டாறேன் ” என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் தந்து இதை செம்மல் கொடுக்கச் சொன்னார் என்று கொடுத்து விட்டுப் போய் விட, நான் அங்கேயே காத்திருந்தேன்.  உள்ளே சென்ற செம்மல் திரும்பவும் வந்தார், என்னைப் பார்த்து,  “ஏன், ரவீந்தர், இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன், தர்றேன் ” என்றார். நான் உடனே , “அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் ” என்றேன் .. “அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் ” என்றார் … இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன். செம்மலும் கண் கலங்கி விட்டார் . என்னை அணைத்து ” நல்லா இரும்” என்று வாழ்த்தினார் . இன்று நான் 6 ஆறுபிள்ளைகளுக்கு தந்தை.
எத்தனையோ குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உழைத்த ஒரு மாமனிதர் தனக்கு குழந்தை இல்லையே என்று அடிக்கடி நினைத்து மனம் வருந்தியதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கும் கண்கலங்கி விடுகிறது.
குழந்தைகளுடன் எம்,.ஜி,ஆர்.
குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர்.
தனக்கு குழந்தை இல்லாத பாக்கியத்தை ஏங்கி “அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அதுலேயாவது, நான் பெரிய புள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!” என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டதாக வசனகர்த்தாஆரூர் தாஸ் குறிப்பிடுகிறார். இன்னொரு முறை “என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரே ஒரு குழந்தையைக்கூட குடுக்க மனசு வரலே பாத்திங்களா? என் உடம்புல ஓடுற அதே ரத்தந்தானே அவர் உடம்புலேயும் ஓடுது! பின்னே ஏன் இப்படி? என மனம் புழுங்கியிருக்க்றார். ரவீந்தர் குறிப்பிடும் மற்றொரு சுவையான சம்பவம் எம்.ஜி.ஆரின் பண்பட்ட குணத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.டெய்லர்சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன்,  நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இதுபோன்று எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள், அவர் ஒவ்வொருவரிடமும் நடந்துக் கொண்ட விதம் அவரது தாயாள குணம், இவையாவையும்ஒன்றுவிடாமல் எழுத்து வடிவத்தில் பதிவு செய்து  நம்மை வியப்பிலாழ்த்துகிறார் ரவீந்தர்.
– அப்துல் கையூம்
– தொடரும்
எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  5 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  7 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் –  9 எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 10
March 4, 20152 Replies
எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 10
1 Votes
vn photo 3
முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்ட ரவீந்தர் அவர்கள் நூல்கள் ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று வாசகர்கள் கேட்கலாம். அவர் எழுதிய நூல்கள் எண்ணிக்கையில் குறைவுதான். ஆரம்ப நாட்களில் `கன்னி`, `குற்றத்தின் பரிசு`, `பெண்ணே என் கண்ணே` ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார். “பொம்மை” பத்திரிக்கையில் எம்.ஜி.ஆரைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
பிற்காலத்தில் தன் நல்வாழ்வுக்கு வழியமைத்து வழிகாட்டி, தன்னைக் கூடவே துணையாக வைத்திருந்த எம்.ஜி.ஆரின் நினைவாக இரண்டு நூல்கள் எழுதினார். ஒன்று “விழா நாயகன் எம்.ஜி.ஆர்”.. மற்றொன்று “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்”.
எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ பேர்கள் எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். எ.சங்கர் ராவ் எழுதிய “தரணி கண்ட தனிப்பிறவி”, நாகை தருமன் எழுதிய “மாமனிதர் எம்.ஜி.ஆர்.”, சபீதா ஜோசப் எழுதிய “மறக்க முடியாத மக்கள் திலகம்”, பா.தீனதயாளன் எழுதிய “எம்.ஜி.ஆர்.”, ரங்கவாசன் எழுதிய “மக்கள் ஆசான்”, ஆர்.முத்துக்குமார் எழுதிய “வாத்யார்”, மணவை பொன் மாணிக்கம் எழுதிய “எட்டாவது வள்ளல்”, எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பளராக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய “மனிதப் புனிதம்” மற்றும் “எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்” போன்ற எண்ணற்ற நூல்கள் பதிப்பாக வெளிவந்திருந்த போதிலும் கலைமாமணி நாகூர் கே.ரவீந்தர்  எழுதிய இரண்டு நூல்களும் முக்கியப் பதிவாக எல்லோராலும் கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் கலைவாழ்வில் ஆரம்ப நாட்கள் முதற்கொண்டே அவரது உயர்வு தாழ்வுகளின் போதெல்லாம் உடனிருந்து, இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ரவீந்தரைத் தவிர எம்.ஜி.ஆரின் குணநலன்களை வேறு யாராலும் அவ்வளவு துல்லியமாக பதிவு செய்ய இயலாது. எம்.ஜி.ஆரின் பாராட்டத்தக்க பழக்க வழக்கங்கள், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகள், அவரது தாராள மனம், கொடைத்தன்மை, சந்தித்த நண்பர்கள் போன்ற விடயங்களை ஒன்று விடாமல் எழுதி வைத்திருப்பதால் ரவீந்தருடைய நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
“முள்ளும்  மலரும்” என்று தன் படத்திற்கு இயக்குனர் மகேந்திரன் பெயர் வைத்திருப்பார். அதன் பொருள் ஆங்கிலத்தில் ” Thorn and Flower” என்றுதான் நானும் நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அந்த படத்தலைப்பின் பொருள் “Thorn also blossoms”  என்று.
அதே போன்று விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ரவீந்தர் எழுதிய நூலின் தலைப்பு “விழா நாயகன்” ” என்பதாகும். விழாவுக்கெல்லாம் நாயகன் என்ற அர்த்தத்தில் அத்தலைப்பு கொடுக்கப்படவில்லை. அதன் பொருள்  “விழா(த) நாயகன்” என்பதாகும். வாழ்க்கையில் மூன்று முறை பேராபத்துக்களைச் சந்தித்து “முப்பிறவி கண்டவர்” என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ பேர்கள் அவரை வீழ்த்த நினைத்தபோதும் “விழாத நாயகனாக” இறுதிவரை தன் வெற்றியை நிலைநாட்டிக் கொண்டவர். இருபொருள் கொண்ட இந்த நூலின் தலைப்பு எல்லோர் கவனத்தையும்  ஈர்த்து ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது.
“விழா நாயகன்” நூலில் கீழ்க்கண்ட தலைப்பில் எம்.ஜி,ஆரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை கோர்வையாக சுவைபட தனக்கே உரிய எளிய நடையில் விவரித்திருப்பார் ரவீந்தர்.
 ராமச்சந்திரன்,
செம்மலின் வாழ்க்கைக்கு,
புரட்சி குமார்,
நெஞ்சு குளிர்ந்த நிகழ்ச்சி,
நீங்களே எங்கள் மன்னர்,
கலைக்கு விலை,
தசாவதாரம்,
தமிழுக்குச் சிறப்பு எழுத்து,
திரை ஏணி, காவியம் எது?,
நாளை நடப்பதை அறிந்தவர்,
தங்க நிழல்,
உங்களில் ஒருவன்,
பெண் சிரித்தால்,
பூட்டு வந்த பின்தான்,
என்னைப் போல் நீங்கள்,
உலகம் உருண்டை ஏன்,
ஜானு சொன்னது,
படத்தின் தலைப்பு,
நேற்று இன்று நாளை,
மூன்றெழுத்து வேந்தன்,
நல்ல நேரம்,
இதோ.. இவர்கள்,
டாக்டர் பட்டம் யாருக்கு?,
தாய் சொல்லை தட்டவில்லை,
அவருடைய எண்ணம்,
ஆடவந்த தெய்வம்,
 நட்பு என்பது,
இதய தெய்வம்,
மக்களின் நினைவில்
ரவீந்தரின் மற்றொரு படைப்பான “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.” என்ற நூலில்  எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற அரிய பல நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் விவரித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை வாசகர்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் பல சுவையான நிகழ்வுகளை ரவீந்தரின் நூல் நமக்கு விருந்து படைக்கின்றது. தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை மக்கள் திலகத்தினுடனே செலவழித்த ரவீந்தர் எத்தனையோ நற்பண்புகளை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாக பெருமையுடன் அடிக்கடி கூறுவார்.
ரவீந்தர் குறிப்பிடும் கீழ்க்கண்ட சம்பவம் மக்கள் திலகத்தின் மகத்தான பண்பை வெளிக்காட்டுகிறது. மனதைத் தொடும் அந்த நிகழ்வை இதோ ரவீந்தர் விவரிக்கின்றார்.
“அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஊட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்தோம். பொன்மனச் செம்மலுடன்  ஜானகி அம்மையாரும், செம்மலின் உதவியாளர் சபாபதியும், நானும் (ரவிந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம்.  கார் , குன்னூரைத் தாண்டியபோது ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர்  பாதையோரத்தில் நடந்துச் செல்வதை நாங்கள் காண நேரிட்டது.
செம்மல் உடனே காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :”இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன், நீங்க என் பக்கத்திலே வாங்க ” – என்றார் .
அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்றுப் பார்த்தார் , காரில் அவரையும் ஏற்றிக் கொண்டார் . கார் புறப்பட்டது. அவர் ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் சிந்தனையில் இருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார்
” பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? ”
“கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் ”
” இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா  என்ன? … உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?”
” இருக்கிறாங்க, ஆனா அவங்களுக்கும் பிள்ளைங்க இருக்குதே …. ” என்றார் பெரியவர்
மௌனம் நிலவியது …. சற்று தூரம் வந்தவுடன் பெரியவர் வண்டியை நிறுத்துச் சொல்லி , இறங்கிப் போய் விட்டார் ….
மக்கள் திலகம் ரவீந்தரைப் பார்த்து கேட்கிறார் :
” ரவீந்திரன், இந்தப் பெரியவர் பற்றி என்ன நினைக்குறீங்க ? ”
” ரொம்ப பெரியவர் . ஏன்னா நீங்க கேட்ட கேள்விக்கு அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்குதேன்னு ஒரு பெரிய விஷயத்தை சுருக்கமா சொல்லிட்டாரு ” என்று நான் சொல்ல …. அதற்கு பொன்மனச் செம்மல்
” அட , அதை கேக்கலேய்யா , அவருக்கு என்னைத் தெரியலே , நீர் என்னமோ அன்னிக்கு நாட்டுலே என்னை தெரியாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு சொன்னீரே ! நீர் தோத்துப் போயிட்டீர்  பார்த்தீரா…” என்று பலமாகச் சிரித்தார் .
அப்பொழுது இன்னமும் கார் நின்றுக் கொண்டதை அறிந்த செம்மல்
” ஏம்பா இராமசாமி நிக்குறே… போயேன் ” என்றார்
” அந்தப் பெரியவர் என்னை நிக்க கை காட்டிட்டு , போனாருங்க . அதோ வரார் பாருங்க ” என்றார் இராமசாமி
அந்தப் பெரியவர் வந்தார் , கைகளில் பழங்களுடன் ….
” ஐயா , நான் சாவுறதுக்கு முன்னால ஒரு தரம் உங்களைப் பார்க்கணும்னு இருந்தேன் . உங்க கூட உங்க கார்லே வர்றதை நினைச்சதும் எனக்கு பேச்சு மூச்சு இல்லை . என் அல்லாஹ் கிட்டே உங்களை நல்லாக்கி வைக்க வேண்டிக்கிட்டே இருந்தேன் . என் பிள்ளைங்க உங்க படம் பார்ப்பாங்க . நான் படம் பார்க்க மாட்டேன் . உங்க படத்தை சுவரொட்டியிலே பார்த்திருக்கேன் .. வெறுங்கையோட பார்த்துட்டோமேங்கற கவலை வேறே . அதைப் போக்கத் தான் இதுங்களை வாங்கியாந்தேன் . “மிஸ்கீன்” (யாசகன் ) தர்றேன் வாங்கிக்குங்க ” என்றார் அந்தப் பெரியவர்
புன்சிரிப்புடன் மக்கள் திலகம் அவற்றை பெற்றுக் கொண்டார் , கார் கிளம்பியது , ஜானகி அம்மையார் மக்கள் திலகத்தை பார்த்து கேட்டார்
” பாவம் .. எதாச்சும் அவருக்குக் கொடுத்திருக்கலாம், நான் கொடுக்கலாம்னு வந்தப்ப ஏன் தடுத்தீங்க ? ”
அதற்கு மக்கள் திலகம் பதிலளித்தார் …
” ஜானு , தன்மானத்துக்காக தன்பிள்ளைங்க கிட்டே கேட்காம , தானே விறகு வித்து சாப்பிடுறவர் கிட்டே , நாம பணம் கொடுத்தா வருத்தப்படுவாரு . அவர் ஒரு பெரிய கேரக்டரு ! சரி அவர் கொடுத்த இந்தப் பழங்களை பத்திரமா வை . நானே சாப்பிடப் போறேன் , யாருக்கும் கொடுக்க மாட்டேன் ” என்று சிறுகுழந்தையைப் போல சொன்னார் மக்கள் திலகம் ….
ரவீந்தர்  குறிப்பட்ட இந்த சம்பவத்திலிருந்து எம்.ஜி.ஆர். எப்படிப்பட்ட தாராள மனமும், இரக்க குணமும் கொண்ட பண்பாளர் என்பதை நாம் நன்கு அறிய முடிகின்றது.
விஜயா-வாஹினி அதிபர் நாகிரெட்டி அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே நெருக்கமான நட்புறவு இருந்து வந்தது படவுலகில் பலரும் அறிவர்.. அதனை  ரவீந்தருடைய “விழா நாயகன்” நூல் வாயிலாக  அறிய முடிகின்றது.
விஜயா வாகினி அதிபர் நாகிரெட்டி அவர்கள் தோட்டத்துக்கு வந்தார். “”ரெட்டியார் சார் வந்து பேசி விட்டுப் போகும் வரை யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம்” என்று தன் காவல் அதிகாரி விவேகானந்தராஜிடம் எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். ஹாலில் அமைச்சர்கள் பலர் இருந்தனர்.
ரெட்டியார் வந்ததும் அவர்களை மட்டும் செம்மலின் உதவியாளர் மாணிக்கம் வந்து உள்ளே அழைத்துப் போனார். நான், ரெட்டியாரின் உடன் வந்த உதவியாளரிடம் ஹாலில் பேசிக் கொண்டிருந்தேன். “”ரெட்டியார் விஜயா கார்டனில் புதிதாக ஒரு ஹெல்த் சென்டர் கட்டறாங்க. அதுக்கு தலைவர் பெயர் வைக்க அனுமதி கேட்க வந்திருக்காங்க” என்று சொன்னார்.
“”நட்பு என்பது, என்ன பெறுவது என்ற எண்ணத்தில் கொள்ளும் உறவல்ல. என்ன தருவது? என்று காக்கும் உறவு என்ற பெரியோர் சொல்படி ரெட்டியார் வந்திருப்பதை உணர்ந்தேன்”
என்று அந்த புத்தகத்தில் ரவீந்தர் குறிப்பிடுகிறார்.

 Gdevaraj

Leave a comment

Comment