TamilsGuide

வாய்ப்புக் கேட்பதிலும் வித்தியாசத்தை கடைபிடித்த கலைஞன்

சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் இருந்தது அந்த சினிமா கம்பெனி.இரு நண்பர்கள் மெதுவாக கம்பெனி கேட்டை நெருங்கினார்கள்.வெளியே விரைப்பாக கூர்க்கா.அவர் விசாரிப்பதற்கு முன்பாகவே நண்பரில் ஒருவர் மிஸ்டர் வேலுமணி இருக்காரா? . பவ்வியமானார் கூர்க்கா.இந்தியில் இருக்கார்ங்க வந்தது.வழிவிட்டது கூர்க்கா.உள்ளே தடியான ஒருவர்.மிஸ்டர் வேலுமணியை பார்க்கணுமே.அதோ!.. அவருதாங்க.வெளீர் வெள்ளையில் மிக கண்ணியமாக மிஸ்டர் வேலுமணி.அது சரவணா பிலிம்ஸ் அலுவலகம்.நடிக்க சான்ஸ் கேட்டு வந்த நண்பர்கள் அசால்டாக உள்ளே வரக் காரணம் அந்த அதிகாரத் தோரணை.எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி நடந்தால் காரியம் சாதிக்கலாம் என்பதை தெளிவாக அறிந்து வைத்திருந்த  நண்பரின் சாதனையை வெடவெடப்போடு பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு  நண்பருக்கு வியர்த்துக்கொட்டியது.என்னடா பண்றே.!.. அட இர்ரா!.. நேரே வேலமணியிடம் போனார் நண்பர். ஹலோ சார் நான் நாகேஷ்.நடிகர். என்னைப் பத்தி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.நான் உட்காரலாமா?. தாராளமா உட்காருங்க. வாய்ப்புக் கேட்பதிலும் வித்தியாசத்தை கடைபிடித்த அருமையான கலைஞனுக்கு இன்று பிறந்த  தினம்.

உங்க படத்தில நடிக்க ஒரு சான்ஸ் தாங்க சார்.அப்படித் தான் எல்லோரும் கெஞ்சுவார்கள்.ஆனால்  நாகேஷ் எனும் அந்த  மகத்தான கலைஞன்  வித்தியாசமான அணுகுமுறையால் இன்னொரு நண்பனை வியக்க வைத்தார்.வியப்படைந்தவர் வீரப்பன்.பணத்தோட்டத்தில் இருவரும் அடித்த லூட்டிக்கு சற்றும் குறையாமல் வேலுமணி ஆபீஸில் நாகேஷ் லூட்டியடித்த வரலாறு அவரே சொன்னது. ஏன்டா நீபாட்டுக்கு உள்ளே புகுந்தே தடாலடியா மூவாயிரம் வாங்கிட்டு வந்திட்டியே.அப்போது தான் வளர்ந்து வரும் நாகேஷூக்கு கார் வாங்க ஆசை.அடித்துப் பிடித்து மூவாயிரம் சேர்த்துவிட்டார்.மீதி மூவாயிரத்திற்குத் தான் வேலுமணியிடம் சான்ஸ்.அர்ஜெண்டா மூவாயிரம் தேவைப்படுது சார்.உங்க படத்தில சான்ஸ் கொடுத்து பணத்தை கழிச்சுக்குங்க.கொஞ்சம் யோசித்த வேலுமணி என்ன நினைத்தாரோ நாச்சிமுத்து!.. இவருக்கு ஒரு மூவாயிரம் கொடு என்றது தான் வீரப்பனுக்கு மகா ஆச்சரியம்.எமகாதகன்டா.அது தான் நாகேஷ். அந்த பணம் கிடைத்த ராசி தான் சித்ராலயா கோபுவிடமிருந்து அழைப்பும் காதலிக்க நேரமில்லை சான்ஸூம்.

நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகரைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம்.அவரது வரலாறு ஏறக்குறைய எல்லோருக்குமே தெரியும்.ஆனாலும்  அவரது பிறந்த  நாளில் அவரை நினைக்காமல் இருக்க முடியவில்லை.எல்லா மனிதனும் ஒரு போல் இருப்பதில்லை.ஆனால் எல்லா மனிதனும் நாகேஷைப் போல் இருப்பதில்லை.இருக்கும் இடத்தை கலகலப்பாக்குவதில் மட்டுமல்ல எதிராளியை திணறடிப்பதில் அவரை மிஞ்ச ஆளிள்ளை.நாமெல்லாம் ஒரு மாதிரி சிந்தித்தால் அவரோ வேறொரு கோணத்தில் சிந்திப்பார்.நடிகர்கள் எப்போதும் ஃபயராக இருக்க வேண்டும். இருப்பதிலேயே கஷ்டமான கேரக்டர் எது சார்.?. ஜாம்பவான் நடிகர் திலகத்திடம் ஒருவர் கேட்க சட்டென அவர் சொன்னது காமெடி கேரக்டர் தான்.அடுத்தவரை சிரிக்க வைப்பது கடினமான காரியம். கலைவாணர் காளி என் ரத்தினம் தொடங்கி எத்தனையோ கலைஞர்கள் நகைச்சுவையில் மிளிர்ந்திருக்கிறார்கள்.அவர்கள் வசனங்களில் மிளிர உடல் மொழியில் நம்மை   சிரிக்க வைத்தது இருவர் தான்.சந்திரபாபு மற்றும்  நாகேஷ் .சந்திரபாபு பல படங்களில் செய்து காட்டினாலும் அவரை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய நாகேஷின் நகைச்சுவை காலம் கடந்தும் நம்மை சிரிப்பு மூட்டிக்கொண்டிருக்கிறன.

கன்னட பிராமண குடும்பத்தை பின்புலமாக கொண்ட நாகேஷின் ஆரம்ப காலங்கள் தாராபுரம் கொழிஞ்சவாடி தான்.பள்ளிப் படிப்பிலேயே அந்த சுட்டித்தனம் கூடவே ஒட்டிக்கொண்டது.திருக்குறளை எழுதியது யார்?. வினாவிற்கு நாகேஷ் எழுதியது ஒரு புலவர்.கடுப்பான வாத்தியார் இது எனக்குத் தெரியாதா என்றார்.சார் கேள்வியே தப்பு.திருக்குறளை எழுதிய புலவர் யார் என கேட்டிருந்தால் வள்ளுவர் என எழுதியிருப்பேன்.நீங்க ஒழுங்காக கேட்கலை.எல்லாம் என் நேரம்டா.அகராதி புடிச்ச பயகிட்ட பேசமுடியாதுடா.இதே அகராதி அவரது இறுதி காலம் வரை தொடர்ந்து அவரிடம் இருந்தது தான் மற்ற கலைஞர்களுக்கும் நாகேஷூக்கும் உள்ள வித்தியாசம்.ஆனால் எளிதில் வெற்றிக்கனி அவரது மடியில் வந்து விழுந்துவிடவில்லை.

உன் மூஞ்சியை கண்ணாடியில பாத்திருக்கியா?. கேட்டவர்கள் நிறைய பேர்.கோவை பி.எஸ்.ஜி.யில் படிக்கும்போது ஆண்டவன் மூன்று முறை அவரது முகத்தை கொத்திவிட்டான்.மழுங்கிப்போன அம்மிக் கல்லுல நல்லா அரைக்க முடியாது.அப்பப்போ கொத்தி விட்டா அழகா அரைக்கும்.தனது மைனஸை ப்ளஸாக மாற்றிய மகா கலைஞன் நாகேஷ்.வேறொருவராக இருந்தால் வீட்டில் முடங்கியிருப்பார்.என்னய்யா நடிக்கிறீங்க ராவ்ஜீ கைல குடுத்தா பிச்சு உதறிடுவான்.தனது நண்பனைப் பற்றி கடைசி வரை சிலாகித்தவர் கிரேட் கே.பி.அவரிடம் பழகுவதற்கு முன்பே நாகேஷ் பட உலகில் நுழைந்துவிட்டார்.பார்க்காத வேலைமில்லை.எதிலும் மனம் ஒட்டவில்லை.மா.ரா.என்ற மா.ராமச்சந்திரன் ரயில்வே யூனியனுக்காக ஒரு நாடகம் போடுகிறார் என்றதும் அவரை நச்சரித்தார்.நடிக்கிறது என்ன சாதாரண விஷயமா என்றதோடு அவர் நிறுத்தவில்லை.அதே கண்ணாடியை அவரும் கேட்டார்.இவரது நச்சல் தாங்காமல் தான் எனக்கு வயித்து வலி.அவ்வளவுதாம்பா உன் டயலாக்.மனிதர் அதற்காக ஒரு மாதம் ஒத்திகை பார்க்க வைத்தார்.செம கடுப்பில் இருந்த நாகேஷ் அந்த ஒரு டயலாக்கோடு நிறுத்தவில்லை.நாடக மேடையை ஒரு வழியாக்கினார்.முதல் வரிசையில் மக்கள் திலகம் விழுந்து விழுந்து சிரித்தார்.இந்த தீக்குச்சி ப
ோன்ற பையனுக்கு பரிசு கொடுக்கலாம்.வெள்ளிக்கோப்பை அந்த வயித்து வலிக்குப் போனதை மா.ரா.வால் கூட நம்ப முடியவில்லை.இதே ஆச்சரியம் ஸ்ரீதரிடம்.

நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு ஓரிரு காட்சிகள் தான்.ஆனால் படம் முழுவதும் வரவைக்கக் காரணம் நாகேஷின் உடல் மொழி.இந்த பையன்கிட்ட வெஸ்டர்ன் டச் இருக்கு ஸ்ரீ.அப்படியே  ஜெர்ரி லூயிஸ் பாடி லாங்குவேஜ்.கேமிரா வழியாக கவனித்த வின்சென்ட் சொன்னதும் எஸ். எஸ் என ஆமோதித்தார் ஸ்ரீதர்.அதுவே நெஞ்சம் மறப்பதில்லை காதலிக்க நேரமில்லை கலைக் கோயில் கொடி மலர் ஊட்டி வரை உறவு என விரிவடைந்தது.ஸ்ரீதர் நாகேஷை ஒழுங்காக தூங்கவிடவில்லை.அவரது கால்ஷீட் நிரம்பி வழிய முதல் காரணம் காதலிக்க நேரமில்லை.

ஹாய் செல்லப்பா உன்னை அடிச்சுக்க ஆளே இல்லைடா.!.. அந்த ஓஹோ புரடக்ஷன் தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பெயரானது.அதற்குப் பின்னால் பலரது உதவி இருக்கிறது.முக்கியமாக க்ளப் ஹவுஸ் நண்பர்கள் மற்றும் பாலாஜி.சோத்துக்கு தாளம் போட்ட காலங்களில் இருக்க இடம் தந்து படுக்க மெத்தை தந்து பல வகை உணவும் தந்த உதவிய பாலாஜியை நாகேஷ் கடைசி வரை மறக்கவில்லை.மத்தவனெல்லாம் நடிகன். நீ  கலைஞன்டா .கவலையே படாதே. இப்போ வெரட்டுற பசங்க ஒரு காலத்திலே உன்னை பிடிக்க வெரட்டுவானுங்க.தாமரைக் குளத்தில் நடிகவேள் சொன்னது அப்படியே நடந்தது.எங்கப்பா அந்த ராவ்ஜீ.?. எங்க போய்த் தொலைஞ்சான்.?. அத்தனை ஏற்பாடுகளும் செய்துவிட்டு நாகேஷூக்காக காத்துக்கொண்டிருந்த நண்பனைக் கூட அவர் கடுப்பேற்றியிருக்கிறார்.மொத்தமாக கால்ஷீட் கொடுக்கும் பஞ்சாயத்தெல்லாம் இல்லை.நாகேஷ் ஒன்றரை நாள் போதும்.அருமையான கேரக்டர் ஒன்னு இருக்கு செய்யறீங்களா.?. பிரபலமான ஏ.பி.என்.கெஞ்சும்படி தான் அவரது திரை வாழ்க்கை இருந்தது.மக்கள் திலகம் ஒரு பக்கம் நடிகர் திலகம் மறுபக்கம் பிய்த்துப் பிடுங்க அவரோ நண்பர் ஜெய் சங்கரோடு லூட்டி அடித்துக்கொண்டிருப்பார்.

என்னடா திடீர்னு கரண்டு கட்டாயிடுச்சு.இதெல்லாம் அவன் வேலையாத் தான் இருக்கும்.எலக்ட்ரீஷியன்கள் இதோ ஒரு நிமிஷம் சார் சரி பண்ணிடுறேன் என கெஞ்சுவார்.நாகேஷ் அவரை சரி பண்ணி வைத்திருப்பார்.அரை மணி நேரம் நோண்ட அவருக்கு கொஞ்சம் தள்ளிவிட்டு அரக்கப் பரக்க செட்டிற்குள் நுழையும்போது கரண்ட் வந்திருக்கும்.நேரா டேக் போலாம்பா.டயலாக் ஒரு தரம் பாத்திடலாமே.பாத்திட்டேன்.எப்போ பார்த்தாரோ ஆக்ஷன் எனும்போது வேறொரு ஸ்டைலில் அசத்துவார்.பெரும்பாலும் இயக்குநர் நினைத்ததை விட இது அழகாக வந்திருக்கும்.அப்படித் தான் திருவிளையாடல் தருமியும் வந்தது.நாகேஷின் மாஸ்டர் பீஸை அவர் மைலாப்பூர் தெப்பக் குளத்தில் பிடித்தார்.ஏ.பி.என் ஒன்றரை நாள் கால்ஷீட் தான்.நேரத்துக்கு வந்தால் சிவாஜி சிவனாக நேரமாகும் என்றார்கள்.என் போர்ஷனை பாத்திடலாமே.அவருக்கு தருமியைப் பற்றி விளக்க தெப்பக்குளத்தில் ஒரு பெரியவர் புலம்பியது ஞாபகத்திற்கு வந்தது.யூ நோ மிஸ்டர் கிருஷ்ணம்யர் என அவர்பாட்டுக்கு புலம்பியதை அப்படியே அந்த மண்டபத்தில் நாகேஷ் புலம்பினார்.எது ஏங்கிட்டயா?. நான் பாக்கிறதுக்குத் தான் சுமாரா இருப்பேன்.என்னப்பா இவன் பேசறான்.நடிகர் திலகம் ஜெர்க் ஆனார்.நீங்க சிவ பெருமான்.செந
்தமிழில் செப்பலாம்.இவரு சாதாரண பிரஜை தானே .அப்படீங்கறையா?. திலகம் நாகேஷை அவர் பாட்டுக்கு பேச விட அந்தக் காட்சி ரெக்கார்டிங்கில் அவர் அசந்தேவிட்டார்.இன்னொரு தடவை ஓட விடு.சரியாப்போச்சு.இவரு மொத்த சீனையும் தூக்கச் சொல்ல சான்ஸ் இருக்கு.நெஞ்சு படபடக்க நாகேஷ் அவருக்குப் பின்னால்.பிரமாதம்பா இந்தப் பய பின்னிருக்கான்.ஒரு சீனைக் கூட கட் பண்ணாதே.நடிகர் திலகம் சக நடிகர்களை ரசிப்பதிலும் ஒரு திலகம் தான் என்பதை அப்போது நிரூபித்தார்.பிரிக்க முடியாதது பார்க்கக் கூடாதது சேர்ந்தே இருப்பது.ஒவ்வொரு கேள்விக்கும் அந்த பாடி லேங்குவேஜ் அசத்தும்.ஓலையை வாங்கி போவதோடு முடிந்தது.ஆனால் நாகேஷ் திரும்பி வந்து வேணாங்க என்பார்.ஏ.பி.என்.கேமிராவை ஓட விட்டார்.எனக்கு பயமா இருக்கு.பயப்படாதே சென்று வா.கடவுள் மாதிரி உங்களை நம்பி போறேன். யப்பா!.. சொக்கா! .. எல்லோரும் ஸ்பாட்டில் கை தட்டினார்கள்.

நான் வணங்கும் தெய்வத்தில் தான் அந்த சொக்கனை முதன் முதலாகப் பார்த்தது.ரயில் பிடித்து மாம்பலம் வந்து டாக்ஸி பிடித்து வாஹினி வர சொக்கன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.இவரு தான் நாகேஷ்.நம்ப படத்தில ஒரு சின்ன வேஷம்.இயக்குநர் அறிமுகப்படுத்த வணக்கங்க.!.. வாப்பா!.. பெரிய ஆக்டருங்க கூட நடிக்கிறமேன்னு பயப்படாத தைரியமா நடி.மறுபடியும் பேப்பரில் மூழ்கினார்.சார் ஒரு நிமிஷம்.அதே பழைய குசும்புத்தனம்.அப்படியே புதுமுகம் தானேன்னு நீங்களும் நடிப்பை கோட்டை விட்டுறாதீங்க.அப்போது தான் திலகம் அந்த கொத்தவரங்காயை நன்றாகப் பார்த்தார்.இந்தப் பய நமக்கு சரியான டஃப் குடுப்பான் போலிருக்கே என்ற பார்வை.அவர் நினைத்தது சரி தான்.ஏன்டா ஏங்கிட்டயே டயலாக்கா?. ஏன் நீ மட்டும் தான் டயலாக் பேசணுமா?. கலாட்டா கல்யாணத்தில் அந்த காலை வாரி விடும் சீனில் திலகமே கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.அதே அதிர்ச்சி மக்கள் திலகத்திடமும் இருந்தது.

எம்.ஜி.ஆரிடம் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் வெளுத்து வாங்கினார் நாகேஷ்.பெரிசு கெழம் என சகட்டு மேனிக்கு வாரிவிட்டபோதும் நாகேஷ் இல்லாமல் அவருக்கு என்னவோ போல் இருந்தது.தனது சொந்தப் படமான உலகம் சுற்றும் வாலிபனில் அவனுக்கும் ஒரு டிக்கெட் போடுங்கப்பா என்றதோடு நில்லாமல் ஷாப்பிங் போகும்போதெல்லாம் நாகேஷை அவர் மறக்கவில்லை.நாயகனோடு கூடவே ஒட்டிக்கொண்டு வரும் நாகேஷை பல படங்களில் பார்க்கலாம்.அதிலும் யாருமே செய்ய முடியாத ஸ்பூனரிஸத்தை அவர் எங்க வீட்டுப் பிள்ளையில் செய்து காட்டினார்.வார்த்தைகளை மாற்றிப் போட்டு விளையாடும் வித்தை அவ்வளவு எளிதாக யாருக்கும் வராது.நம் நாடு படத்தில் நாகேஷ் கையில் மிகப் பெரிய கிரேட் டேன் இருக்கும்.என்னப்பா இவ்வளவு பெரிய பங்களாவில கன்னு குட்டியை பிடிச்சிட்டு நிக்கிறே. நல்லா பாருய்யா இது நாயி  என்பார் நாகேஷ்.நாயா என அதிர்வார் தங்கவேலு.அதோடு காட்சி முடிந்தது என்றார் ஜம்பு.தங்கவேலு நாயா என்றதும் நாகேஷ் உடனே பின்ன என்ன நீயா என்றார்.கடுப்பாகிவிட்டார் தங்கவேலு.நேராக எம்.ஜி.ஆரிடம் வந்து இங்க பாருங்க இந்தப் பய எக்ஸ்ட்ரா ஒன்னு போடறான்.என்னை நாயிங்கற மாதிரி இருக்கு என்றார்.மூவியாலயாவில பார்த்த எம்.ஜ
ி.ஆர்.விழுந்து விழுந்து சிரித்தார்.நல்லாயிருக்கு இவன் டைமிங்.கட் பண்ண வேண்டாம் என்றார்.தங்கவேலு நொந்தே போனார்.ஏற்கனவே அவர் கடுப்பானவர் தான்.கல்யாணப் பரிசு வெற்றி விழாவில் எனக்கு எவ்வளவு பேரு.ரசிகனுங்க எப்படி பிச்சு எடுத்தானுங்க.இந்த நரம்புப் பய வந்ததும் எல்லோரும் அவன்கிட்ட ஓடுறான் கோபு என சித்ராலயா கோபுவிடம் சிரித்துக்கொண்டே  சொன்னவர் தங்கவேலு.பொறாமையால் அல்ல.இவன்கிட்ட ஏதோ இருக்கு என்ற அர்த்தத்தில் சொன்னது.நம் நாடு ஸ்பாட்டில் அதை தெரிந்துகொண்டார்.இதே கேஸ் தான் வி.கே.ஆருடன்.

இந்தப் பய கூட நடிக்கும்போது கவனமா இருக்கணும்.ஒரே டயலாக்கில நம்மை சாய்ச்சுப்புடுவான் எமகாதகப் பய.பழம் பெரும் நடிகரான வி.கே.ஆர்.பல படங்களில் இதை அனுபவித்திருக்கிறார்.ராமு படத்தில் அவருக்கு அசோகனும் நாகேஷூம் பசங்க.மூத்தவர் அசோகன் அப்பா போல் வில்லத்தனம்.தம்பி நாகேஷ் இருவருக்கும் எதிர் குணம்.ஜெமினியை அடிச்சுப் போட்டுவிட்டு பயத்தோடு வீட்டில் முடங்கியிருக்கும் இருவரையும் நாகேஷ் வாரி விடும் காட்சி அழகாக வந்திருக்கும்.நீங்க அடிச்சுப்போட்ட ஆள் என சொல்லிவிட்டு ஒரு சஸ்பென்ஸ் தருவார்.சொல்லித் தொலைடா எனும்போது உயிரோடு இருக்கான் என்பார்.எங்கம்மா .மீண்டும் ஒரு கேப்.வி.கே.ஆரை பார்த்து உங்க சம்சாரம் என்பார்.முன்ன பின்ன பாக்காத உங்களை கல்யாணம் பண்ணிக்கலயா? .மானம் போகுதுடா .மானத்தை பத்தி பேச நம்ம குடும்பத்தில எங்க யோக்கியதை இருக்கு.அசோகனை ஜெமினி பின்னியெடுக்க நாகேஷ் அண்ணனுக்கு ஒத்தடம் கொடுப்பார்.வி.கே.ஆர்.வருவார்.அடிச்சு பாத்திருக்கேம்பா.இப்படி அர்த்தத்தோட அடிச்சதை இப்பத் தான் பாக்கிறேன் என்பார்.இங்க பாருப்பா முதுகில பூகோளப் படம்.அப்பத்தான் மானம் போகுதுடா என்பார்.சின்னச் சின்ன டயலாக்குகளில் மொத்த காட்சியும் மெறுகேறுவது நாகேஷ் இருந்தால் சாத்தியம்.

பாடல் காட்சிகளிலும் அவரது திறமையை வெளிப்படுத்துவதில் அவர் தவறியதே இல்லை.அதே கண்களில் அசத்தலான பாடல்களில் நாகேஷ் தனித்து நிற்பார்.ஆங்கிலோ இந்திய பெண்மணியாக பி.டி.சம்பந்தத்தை செமையாக வாரிக்கொண்டே இருப்பார்.திருமால் பெருமையில் வரும் காலட்சேபம் கலக்கலாக வந்திருக்கும்.பணம் படைத்தவனில் இவரும் கீதாஞ்சலியும் வரும் காட்சிகள் அருமையாக வந்திருக்கும்.பல படங்களில் மனோரமாவோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.மாமா ராமையாவாக அன்பே வா மறக்க முடியாத படம்.சார் ஒரு பர்ஸ் வச்சிருக்காரு பாரு அய்யய்யோ!.. அத்தை காட்டு சார்.யோவ் அறிவு கெட்ட மாமா வாய்யா உள்ளே.வாழ்க்கையிலேயே முதல் முறையா உள்ள கூப்பிடுறா என ஓடும் நாகேஷை மறக்கவே முடியாது.படகோட்டியில் ரெக்கார்டு போட்டால் வீரம் வரும் நாகேஷ்.கலாட்டா கல்யாணத்தில் விரட்டி விரட்டி காதலிக்கும் நாகேஷ்.பல தேவர் படங்களில் இந்த ஜோடி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.முக்தாவின் பொம்மலாட்டத்தில் இருவருக்கும் மனஸ்தாபம் வர கொஞ்ச காலம் பிரிந்திருந்தது இருவருக்கு மட்டுமல்ல நமக்கும் இழப்பு தான்.சச்சு அழகாக செட்டாவார்.சட்டென ஒட்டிய மாதவி வெட்டிக்கொண்டு போனார்.கே.பி.யின் பல படங்களில் ஜெயந்தி கூட செமையாக 
செய்திருப்பார்.நீர்க்குமிழி எதிர் நீச்சல் பாமா விஜயம் என பல படங்களில் ஆடிப் பாடி நம்மை மகிழ்வித்த ஜோடி.இயக்குநர் ஆவதற்கு முன்பே கே.பி.யை கணித்தவர் நாகேஷ்.பயமா இருக்குடா ஏன்டா இப்படி பறக்கிறே.புதிதாக வாங்கிய காரில் நூறைத் தொட்ட நாகேஷை பார்த்து பயந்த கே.பி.பயப்படாத பாலு .எம்பக்கத்தில இருப்பது வருங்காலத்தில பெரிய டைரக்டரா வரப்போறவருன்னு  எனக்குத் தெரியும் என்றார்.நீயேம்பா நேரம் தெரியாம காமெடி பண்றே.உண்மையிலேயே சினிமாவின் அரிச்சுவடி தெரியாத கே.பி.நம்புவதற்கு முன்பே அவர் மீது நம்பிக்கை வைத்தவர் நாகேஷ்.அந்த நட்பிலும் விரிசல் விழுந்தது வெள்ளி விழா செட்டில்.கே.பி.க்கு ஸ்ட்ரோக் வர அந்த மன உளைச்சலும் ஒரு காரணம்.மூண்றாண்டு விரிசலை நேர் செய்தது அபூர்வ ராகங்கள் தான்.

ஏம் பாலு இந்த சியர்ஸை இப்படி செய்தா என்ன?. தனது நிழலோடு மல்லுக்கட்டிய நாகேஷின் போக்கிலேயே தனது நண்பனை விட்டார் கே.பி.அவருக்குத் தெரியும்.ரிகர்சலில் ஒரு முகம் காட்டும் ராவ்ஜீ டேக்கின் போது வேறொரு ஸ்டைலில் அழகாக முடிப்பார் என்று.எவ்வளவு படங்கள் எவ்வளவு கேரக்டர்கள்.நினைக்க நினைக்க நாகேஷ் எனும் மகத்தான கலைஞன் அதற்கு பின்னால் வந்த தலைமுறையோடும் இனிமையாக பயணித்தார்.தசாவதாரம் காட்சிகள் முடிந்த பிறகு ஐம் ஹானர்டு கமல் என்றார்.அது தான் அவரது கடைசி காட்சி.உங்களுக்கு ஒன்னும் ஆகாது.பழையபடி நாம படம் பண்றோம்.கடைசி தருணத்தில் கமல் தைரியம் தர இதழோர புன்னகையில் எனக்குத் தெரியும்பா என் டைம் முடிஞ்சிடுச்சு என்ற நாகேஷ்.தாராபுரத்தில் உலவிய ஒரு சாதாரண மனிதனை தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல மலையாளம் தெலுங்கு திரையுலகமும் கொண்டாடியது என்றால் அந்த தனி மனிதனிடம் இருந்த திறமை தான் காரணம்.அபூர்வ ராகங்களில் அழகானதொரு விருத்தத்தை கவியரசு தந்திருப்பார்.சுர மருந்தென எதையோ தரும் சூரி என்ற மருத்துவர் என தொடங்கும் விருத்தம்.அதில் கவிஞர் அழகாக முடிப்பார்.கரி மெலிந்தது போல் மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே என்பார்.கரி என்றால் கம்பீரமான ஆண் யானை.அது ம
ெலிந்தாலும் அதன் கம்பீரம் குறையப் போவதில்லை.எப்போதும் அது யானை தான்.நாகேஷ் மெலிந்த தேகம் கொண்டிருந்தாலும் அது திரையுலகில் அழகாக வலம் வந்த கம்பீர யானை தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அந்த யானை இப்போதும் பல பழைய  படங்களில் நம்மை மிரட்டிக்கொண்டு தான் இருக்கிறது. 

Abdul Samath Fayaz
 

Leave a comment

Comment