பிரித்தானிய வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவானந்தன், வரலாற்றிலேயே மிக இளம் வயது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடந்தது. இந்த போட்டியில், இங்கிலாந்து சார்பில் இந்திய வம்சாவளி மாணவி போதனா சிவானந்தன் பங்கேற்றார். மிக இளம் வயதிலேயே சர்வதேச போட்டியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவம் செய்யும் போதனாவை கிராண்ட் மாஸ்டராக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது.
ஒலிம்பியாட் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, இந்த மைல்கல்லை எட்டினார். இது குறித்து போதனா சிவானந்தன் கூறுகையில்,
''எனக்கு மகிழ்ச்சி, இத்தோடு நின்றுவிடாமல், தொடர்ந்து முன்னேறி வரலாறு படைக்கவும் விரும்புகிறேன்'' என்றார்.
போதனா சிவானந்தன் லண்டனில் பிறந்து வளர்ந்தார். ஹாரோவில் வசிக்கிறார். அவரது பெற்றோர் இந்தியாவின் திருச்சியை சேர்ந்தவர்கள், பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
தனது 11 வது வயதில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய போதனா சிவானந்தன் தனது 5வது வயதில் செஸ் விளையாடப் பழகிக்கொண்டவர்.
ஆன்லைன் வாயிலாக தன்னை தயார்படுத்தி போட்டிகளில் பங்கேற்றவர். கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 60 வயதான கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸைத் தோற்கடித்து சாதனை படைத்தார்.
10 வயது, ஐந்து மாதம் மற்றும் மூன்று நாட்களில், ஒரு கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த மிக இளம் வயது பெண் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதன் மூலம், இதற்கு முன்பு அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் வைத்திருந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.


