TamilsGuide

இலங்கை ரசிகர்களின் கரவொலிகளுக்கு மத்தியில் மண்டாடி திரைப்படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் சூரி

பிரபல தென்னிந்திய நடிகர் சூரி நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, கொழும்பு சவோய் திரையரங்கில் தனது ‘மண்டாடி’ திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். 

திரையரங்கில் கூடியிருந்த ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடையே நடிகர் சூரி உரையாற்றுகையில், இலங்கை மக்களுக்கும், தனது தமிழ் உறவுகளுக்கும் மற்றும் சிங்கள மக்களுக்கும் முதற்கண் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

உலகம் முழுவதும் ‘மண்டாடி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும், இலங்கையிலும் இத்திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் வரிசையில் நிற்பதாகவும் விநியோகஸ்தர்கள் கூறியதாகத் தெரிவித்தார்.

இலங்கை மக்களின் இந்த முரட்டுத்தனமான அன்பையும் பாசத்தையும் நேரில் கண்டு நெகிழ்ந்து போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ரசிகர்களின் இந்த அளப்பரிய அன்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், சினிமாவைச் சினிமாவாகப் பார்த்து ரசிக்குமாறும், படம் பார்த்த பிறகு ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தையும், அன்றாட தொழிலையும் கவனிப்பதே மிகவும் முக்கியமானது என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், நகைச்சுவை நடிகராகத் தொடங்கி கதாநாயகனாக உருவெடுத்துள்ள தனது திரைப் பயணம் குறித்துக் கூறுகையில், பரோட்டோ சூரி, புஷ்பா புருஷன், குமரேசன், சொக்கன் மற்றும் முத்துக்காளி என ரசிகர்கள் தனக்குக் கொடுத்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அடையாளத்தையும் கௌரவமாகவே பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இத்தனை வருடங்களாக தன்னைக் கூட்டிவந்த அந்தப் பழைய சூரி இன்னமும் தன்னுடன் இருப்பதாகவும், அவரே தன்னை வழிநடத்துவதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வின் இறுதியில், இலங்கை ரசிகர்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட நடிகர் சூரி, ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். 

Leave a comment

Comment