TamilsGuide

காசநோய் எதிர்ப்பு போராட்டத்தில் இலங்கைக்கான இந்தியாவின் உதவிக்கரம்

இலங்கையின் பொது சுகாதார அமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளைக் கொழும்புக்கு அனுப்பியுள்ளது.

இந்த தகவலை ‘எக்ஸ்’ (X) தளத்தில் உறுதிபடுத்திய இநத்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தனது அண்டை நாட்டை ஆதரிப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.

“இலங்கையின் பொது சுகாதார அமைப்பிற்கு ஆதரவளிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் உள்ளது. காசநோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய சுமார் 3 தொன் சரக்கு, இந்திய விமானப்படையின் C130J ரக விமானம் மூலம் இன்று (நேற்று) கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது,” என்று அவர் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில், காசநோய் ஒழிப்புப் போராட்டத்தில் உள்ள முக்கிய இடைவெளிகளை நிரப்புவதற்காக, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியப் பிராந்திய உறுப்பு நாடுகள் உறுதியளித்தன. 

இந்நடவடிக்கைகள் ஆரம்பக்கட்டக் கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பரந்த அணுகல், குடும்பங்களுக்கான நிதிப் பாதுகாப்பு மற்றும் புதிய காசநோய் தடுப்பூசிகளுக்கான ஆயத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக் குழுவின் 79-வது கூட்டத்தில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.

2024-ஆம் ஆண்டில், உலகளவில் பதிவான புதிய காசநோய் பாதிப்புகளில் சுமார் 34 சதவீதத்தை உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் கொண்டிருந்தது.

இப்பிராந்தியத்தில் சுமார் 3.68 மில்லியன் பாதிப்புகளும், ஏறத்தாழ 4,33,000 உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment