TamilsGuide

அமெரிக்காவை தாக்கிய நார்ஈஸ்டர்புயல் - வெளிப்பட்டது 142 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பல்

அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளை அதிரவைத்த வீரியமிக்க ‘நார்ஈஸ்டர்’ (Nor’easter) புயலின் காரணமாக , மசாசூசெட்ஸ் மாநிலத்தின் நான்டுக்கெட் (Nantucket) தீவுக் கரையில் 1884-ம் ஆண்டு மூழ்கிய பழமையான மரக்கப்பலின் இடிபாடுகள் வியப்பூட்டும் வகையில் வெளியே தெரியவந்துள்ளது.

மசாசூசெட்ஸ் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அமைந்த மியாகோமத் (Miacomet) கடற்கரையில் வீசிய பலத்த காற்று மற்றும் பிரம்மாண்ட அலைகள் மணல் மேடுகளை அடித்துச் சென்றன.

இதனால் மணலுக்கு அடியில் நூற்றாண்டுக்கும் மேலாகப் புதைந்து கிடந்த ‘வாரன் சாயர்’ (Warren Sawyer) என்ற 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ‘ஸ்கூனர்’ (Schooner) ரக மரக்கப்பலின் பிரம்மாண்ட விட்டங்கள் மற்றும் உலோக பாகங்கள் வெளிப்பட்டன.

கடந்த 1884-ம் ஆண்டு டிசம்பர் 22 அன்று நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து போஸ்டனை நோக்கிப் பருத்தி மற்றும் இரும்புப் பொருட்களுடன் பயணித்த போது, வீசிய பயங்கரப் புயலில் சிக்கி இக்கப்பல் நடுக்கடலில் தரைதட்டி விபத்துக்குள்ளானது.

கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடற்கரை மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், கப்பல் கடலுக்குள் மூழ்கி மணலுக்குள் புதைந்தது.

சுமார் 142 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பல் இடிபாடுகளைக் காண ஏராளமான தொல்பொருள் ஆர்வலர்களும் பொதுமக்களும் கடற்கரையில் திரண்டு வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.     
 

Leave a comment

Comment