TamilsGuide

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள் - சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு கோரி, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சவுதி அரேபியாவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது. LanguageResources

செப்டம்பர் 24 அன்று சவுதி வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அனோஜனைத் தண்டனையிலிருந்து விடுவித்து அவரது உயிரைக் காப்பாற்ற அவசரமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவியை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அனோஜனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருந்த ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டிருப்பதை தாங்கள் அறிந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வழக்கு குறித்த அண்மைய தகவல்கள், அவருக்கு முதலில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை பின்னர் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

அவ்வழக்கு தொடர்பான ஃபேஸ்புக் பதிவை அனோஜன் உடனடியாகத் திரும்பப் பெற்று நீக்கியதுடன், அதற்காக மன்னிப்பும் கோரியிருந்ததாக அந்தக்கடிதம் குறிப்பிடுகிறது.

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ அவருக்கு எந்த நோக்கமும் இருக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

குற்றத்தின் தன்மை, மேற்கொள்ளப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அனோஜனின் தற்போதைய நிலை உள்ளிட்ட இந்த வழக்கு குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

சகிப்புத்தன்மை மற்றும் அனுதாபம் ஆகிய விழுமியங்களைச் சுட்டிக்காட்டி, மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கை பரிசீலித்து, அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு சவுதி அரசாங்கத்திடம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனோஜனுக்கான மன்னிப்பைப் பெறுவதற்காக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment