TamilsGuide

சிறப்புத் தேவை கொண்ட மாணவனை விட்டுச் சென்ற கனடா ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளூர் பூங்காவிற்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லப்பட்ட சிறப்புத் தேவை கொண்ட மாணவர் ஒருவரைத் தவறுதலாக அங்கேயே விட்டுவிட்டு வந்ததற்காக, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு முறைப்படியான கண்டிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வில்லியம் மல்லாக்ட் கிளாசன் என்ற அந்த ஆசிரியர், தனது செயல் தொழில்முறை விதிமீறல் என்பதை ஒப்புக்கொண்டு 'ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையத்துடன்' உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று 'கூட்டனே லேக்' பள்ளி மாவட்டத்தில் துணை முதல்வராகவும் ஆசிரியராகவும் பணியாற்றிய கிளாசன், தனது 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்களைப் பள்ளிக்கு அருகே உள்ள பூங்காவிற்குத் திட்டமிடப்படாதப் பயணமாக அழைத்துச் சென்றார்.

அவரது வகுப்பில் இருந்த ஒரு மாணவனுக்குத் தனிப்பட்ட கல்வித் திட்டம் காரணமாக, கல்வி உதவியாளரின் நேரடி ஆதரவு தேவையாக இருந்தது. எனினும், பூங்காவிற்குச் செல்லும் முன், அந்த உதவியாளர் உடன் வரத் தேவையில்லை எனக் கூறி ஆசிரியரே அவரைப் பள்ளியிலேயே இருக்கச் செய்துள்ளார்.

ஆசிரியர் வருகைப்பதிவை சரிபார்க்கத் தவறியதால், அந்த மாணவர் பூங்காவிலேயே விட்டுச்செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவன் தனியாக நடந்து பள்ளிக்குத் திரும்பி வந்தான். மற்ற மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து சேர்ந்த சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு வந்த அந்தச் சிறுவன், அழுகையுடனும் பேரதிர்ச்சியுடனும் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்தவுடனேயே ஆசிரியர் கிளாசன், பள்ளி முதல்வரிடம் நிலைமையை விளக்கி தனது பொறுப்பை ஒப்புக்கொண்டார். மேலும் மாணவனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு இருவரிடமும் மன்னிப்புக் கேட்டார்.

இச்சம்பவம் நடந்து சில நாட்களிலேயே பள்ளி நிர்வாகம் அவருக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், மாநில ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்தி உத்தரவிட்டுள்ளது.  
 

Leave a comment

Comment