TamilsGuide

கலிஃபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட 4 கோடி ஆண்டுகள் பழமையான அரிய புதைபடிவங்கள் - ஆய்வில் புதிய திருப்பம்!...

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு பணிகளின் போது, சுமார் 4 கோடி ஆண்டுகள் பழமையான அரிய வகை விலங்கின் எலும்புப் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கலிஃபோர்னியாவின் ஓஷன்சைட் நகரில் நகராட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 12 அடி ஆழத்தில் தோண்டப்பட்டபோது, பாறை அடுக்குகளுக்கு இடையே பழமையான விலங்கின் எலும்புகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அப்பகுதி பாதுகாக்கப்பட்டு, ஏழு நாட்கள் தொடர்ந்து தீவிர அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.

மண்ணில் புதைந்திருந்த விலங்கின் விலா எலும்புகள், கால் எலும்புகள் மற்றும் தொடை எலும்புகள் சேதமடையாதவாறு பிளாஸ்டர் உறைகள் மூலம் கவனமாக மீட்டெடுக்கப்பட்டு, விரிவான ஆய்வுக் கூடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இவை ஈயோசீன் காலத்தில் வாழ்ந்த 'பெரிசோடாக்டைலா' வகையைச் சேர்ந்த பாலூட்டியின் எலும்புகளாக இருக்கலாம் என முதன்மை தொல் உயிரியலாளர் முனைவர் ஜோசப் எல் அத்லி தெரிவித்துள்ளார். இவை 'ப்ரான்டோதேர்' எனப்படும் பிரம்மாண்ட காண்டாமிருக அளவிலான 'இடி மிருகமாக' இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வகை விலங்குகள் மூக்கின் மீது Y-வடிவ கொம்பையும், பெரிய உடலமைப்பையும் கொண்டு காடுகளில் தாவரங்களை உண்டு வாழ்ந்தவை. மற்றொரு சாத்தியக்கூறாக, இது கொம்புகளற்ற, நீர்நிலைகளில் வாழும் 'அமினோடான்ட்' எனப்படும் 'சதுப்புநில காண்டாமிருகத்தின்' புதைபடிவமாகவும் இருக்கலாம் எனப் பேராசிரியர்கள் கணிக்கின்றனர்.

Leave a comment

Comment