TamilsGuide

இலங்கை பாராளுமன்றத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு

நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது , சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான ஆலோசகர் பெஞ்சமின் ஒப்பர்மான், KAS சிங்கப்பூரின் ஆசியாவுக்கான பிராந்திய அரசியல் கலந்துரையாடல் திட்டத்தின் கொள்கை ஆலோசகர் ஜோனாஸ் நிட்ஷ்கே, KAS பிரஸ்ஸல்ஸின் சர்வதேச அபிவிருத்திக் கொள்கை கலந்துரையாடல் திட்ட முகாமையாளர் ஸ்வென் நிக்கொலாய், சட்டத்தரணியும் IDAG நிறுவனத்தின் பதிவாளரும் பணிப்பாளருமான சி.ஏ.ஹெட்டியாராச்சி மற்றும் IDAG நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் எஸ்.விமலாகுணரத்ன ஆகியோரும் இத்தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினரை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன வரவேற்றதுடன், இலங்கை பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் இரு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்டப் பரிமாற்றங்களை சபாநாயகர் நினைவுகூர்ந்தது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஈடுபாட்டிற்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

இது இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் சர்வதேச தரநிலைகளைப் பேணுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் பங்களிப்புச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இலங்கையின் அரசியல் மற்றும் சமூகச் சூழல், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டனர்.

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினர் சபாநாயகர் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளையும் பார்வையிட்டதுடன், சபாநாயகர் சபையில் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை வரவேற்றார். இதன்மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
 

Leave a comment

Comment