TamilsGuide

மது அருந்திய ஏர் இந்தியா விமானி சஸ்பெண்ட் - சுவிட்சர்லாந்தில் அதிரடி

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் மூத்த விமானி ஒருவர், மது பரிசோதனையில்   தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உடனடியாகப் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

சூரிச் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு AI-146 என்ற ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு விதிகளின்படி விமானி மற்றும் பணியாளர்களுக்கு வழக்கமான ஆல்கஹால் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட விமானியின் மூச்சுக் காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மதுவின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, அந்த விமானி உடனடியாகப் பணி செய்யத் தடை விதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பயணிகள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மாற்றாக வேறு மூத்த விமானி வரவழைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு விமானம் டெல்லிக்குப் பாதுகாப்பாகப் புறப்பட்டுச் சென்றது.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA), விமானியின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும், தவறிழைத்த விமானி மீது சிவில் விமானப் போக்குவரத்து விதிகளின்படி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளது
 

Leave a comment

Comment