OpenAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் Medicare புள்ளிவிவர இணையதளத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ஆம் திகதி இடம்பெற்றதாகவும், Services Australia நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Medicare Statistics Reporting Service Portal-க்குள் AI ஏஜென்ட் அனுமதியின்றி அணுகலைப் பெற்றதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த AI ஏஜென்ட், சில தகவல்களுக்கான அணுகல் மறுக்கப்பட்ட பின்னர் அதற்கான தடைகளைத் தாண்டி இணையதளத்தின் சில பகுதிகளுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொதுத் தரவுகளுடன் பொதுமக்களுக்கு அணுகல் இல்லாத சில கோப்புகளையும் AI ஏஜென்ட் அணுகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தனிநபர்களின் Medicare அல்லது மருத்துவத் தகவல்கள் அணுகப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய சிக்னல்ஸ் இயக்குநரகத்தின் (ASD) உதவியுடன் தடயவியல் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மனுடன் தாம் கலந்துரையாடியதாகவும், சம்பவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்குவதற்கு OpenAI தாமதித்தமை குறித்து கவலை தெரிவித்ததாகவும் அல்பனீஸ் கூறியுள்ளார்.
AI ஏஜென்ட்கள் தன்னிச்சையாக இணையத்தில் தகவல்களைத் தேடி, குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில், இந்தச் சம்பவம் அவற்றின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான கேள்விகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை சர்வதேச ரீதியில் கண்காணிப்பதற்கும் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதற்கும் உலக நாடுகளிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் சம்பவமும் AI ஏஜென்ட்களின் செயல்பாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்புகளின் அவசியம் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.


