தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக ஈழத்தை பின்புலமாக கொண்ட கனடா வாழ் மைத்ரேயி ராமகிருஷ்ணன் மாறியுள்ளார்.
கனேடிய நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது அடையாளம் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தனது அடையாளம் தொடர்பில் தெரிவித்த கருத்துகள்
மைத்ரேயி ராமகிருஷ்ணன் வழங்கியதாகக் கூறப்படும் நேர்காணல்களில், தனது இன மற்றும் கலாச்சார அடையாளம் குறித்து வெளிப்படையாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னை ஈழத் தமிழ் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வதாக அவர் நேர்காணலொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது என்றாலும், தன்னை வெறுமனே “இலங்கையர்” என அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, தன்னை ஈழத் தமிழர் என்று முன்னிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, Best of the Best திரைப்படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு வசனத்தை மாற்றுமாறு அவர் கோரியதாகவும் கூறப்படுகின்றது.
Best of the Best திரைப்படத்தில் இடம்பெற்ற “தமிழ் இலங்கை பெண்” என்பதற்குப் பதிலாக, “நான் தமிழ், எனது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்யுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
மைத்ரேயியின் கருத்துகள் வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் சில சிங்கள இனவாதிகள் பல்வேறு விதமான எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வரும் அதே சமயம் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் அவரது சுய அடையாள உரிமைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டுப் போர், இடம்பெயர்வு மற்றும் குடும்ப வரலாறு போன்ற காரணிகள் ஒருவரின் அடையாள உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவரது கருத்து தனியுரிமை சம்மந்தப்பட்டது என்றும் ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, மைத்ரேயி தன்னை ஈழத் தமிழ் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்வது அவரது தனிப்பட்ட உரிமையும் ஆகும்.
அதேசமயம் ஈழத்தை பின்புலமாக கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனைச் சுற்றியுள்ள சர்ச்சை, ஒரு திரைப்பட நடிகையின் கருத்தாகத் தொடங்கி, அடையாளம் மற்றும் வரலாறு குறித்த பரந்த உரையாடலாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன.
மைத்ரேயியின் கருத்துகளைத் தொடர்ந்து, Best of the Best திரைப்படம் தொடர்பில் இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, IMDb தளத்தில் திரைப்படத்துக்கு எதிராக திட்டமிட்ட மதிப்பீடுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும், திரைப்படத்தின் மதிப்பீடுகள் திட்டமிட்டு குறைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு நம்பகமான தரவுகள் மற்றும் சுயாதீனமான ஆதாரங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் படக்குழுவினரும் இது தொடர்பான எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


