கனடாவின் மொன்றியல் நகரில் 45 வயதான பெண் ஒருவர், தனது பணி சார்ந்த இணையவழிச் சந்திப்பில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோதே கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 22, செவ்வாய்க்கிழமை மொன்றியலின் ரெனே-லெவக் வீதியில் உள்ள குடியிருப்பொன்றில் பெண்ணின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஆராயப் பொலிஸாருக்கு அழைப்பு வரப்பெற்றது.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, லீலா பென் சேலம் என்ற பெண் சுயநினைவின்றிக் கிடப்பது கண்டறியப்பட்டது.
துனிசியா நாட்டைச் சேர்ந்த லீலா பென் சேலம், தனது சக ஊழியருடன் ஆன்லைன் வழியிலான காணொளி சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோதே, சந்தேகநபர் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரைத் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டு வந்த அந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தில் அண்மையில்தான் அவர் தனக்கான வீட்டை விலைக்கு வாங்கியிருந்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாக மொன்றியல் பொலிஸ் பேச்சாளர் ழீன்-பியர் பிராபன்ட் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் பொலிஸ் கட்டளை மையம் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
2026-ஆம் ஆண்டில் மொன்றியல் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவான 19-வது கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


