TamilsGuide

எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் தவிர்க்கமுடியாத பெயர் ஜூபிடர் பிச்கர்ஸ் 

எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் தவிர்க்கமுடியாத பெயர் ஜூபிடர்_பிச்கர்ஸ். 1936-ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அறிமுகமான எம்.ஜி.ஆர், கதாநாயக நடிகனாக ஆவதற்கு சுமார் 10 ஆண்டுகள் ஆகின. 1946-ம் ஆண்டு, 'ராஜகுமாரி' என்ற தனது திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகம் செய்தது ஜூபிடர் பிச்கர்ஸ். இடைப்பட்ட 10 வருடங்களில் திரையுலகில் தனக்கென ஒரு ஸ்தானத்தை அடைய எம்.ஜி.ஆர் மேற்கொண்ட போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. முள்ளில் படுக்கைப்போல தினம் தினம் அவர் சந்தித்த அவமானங்கள், புறக்கணிப்புகளை வேறொருவர் சந்தித்திருந்தால், சொந்த ஊருக்கு வண்டி ஏறியிருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மனசஞ்சலம் அடைந்திருக்கிறார். அதுவும் ஆரம்ப நாட்களில்! 

போராட்டமான அந்தக் காலத்தில் 'சாலிவாஹனன்' படத்தில் நடித்தபோது கதாநாயகன் ரஞ்சனுடன் வாள்போரிட்டபோது... ரஞ்சனை மறந்து எம்.ஜி.ஆரின் வாள்வீச்சில் மெய்மறந்துபோனார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் வாள்சண்டைக்கு பெயர்பெற்றவர் ரஞ்சன். எம்.ஜி.ஆரின் வாள்வீச்சுத் திறமையை கண்டு பொறாமைகொண்ட ஒரு படத்தின் கதாநாயகன், தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆருடன் தான் மோதும் வாள் சண்டைக்காட்சியைக் கொளுத்தும் வெயிலில்... பாறையின் மீது எம்.ஜி.ஆர் படுத்தபடி சண்டையிடுவதாக அமைத்தார். காட்சி சரியாக அமைந்தபின்னும் வேண்டுமென்றே பல டேக்குகள் அதை எடுக்கவைத்தார். எம்.ஜி.ஆரை மனதாலும் உடலாலும் காயப்படுத்துவதற்காகவே அவர் அப்படிச் செய்தார் என்று காரணம் சொல்லப்படுகிறது.

எம் ஜி ஆர்கடைசி டேக் முடிந்துவந்தபோது எம்.ஜி.ஆரின் டெர்லின் மேலங்கி, பாறையின் மீதிருந்த வெயிலினால் உருகியிருந்தது. கதாநாயகனின் கெட்ட உள்நோக்கத்தை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்துமுடித்தார். எம்.ஜி.ஆர் வலியுடனும் வேதனையுடனும் அந்தக்காட்சியில் நடித்ததைப் பார்த்த பின்னாளில்... அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிய ஒரு நடிகர், “ராம்சந்தர், எப்போ உங்களை ஒருத்தர் சினிமாத்தொழில்ல இருந்து ஒழித்துக்கட்ட நினைக்கிறாங்களோ, அப்பவே நீங்க அவுங்களுக்குப் போட்டியான ஒரு நடிகர்ங்கறதை அவங்க ஒப்புக்கறாங்கன்னு அர்த்தம். அதனால இந்தச் சோதனைகளுக்கெல்லாம் மனசு கலங்காதிங்க. ஒருவகையில் நீங்க சந்திக்கிற இந்தச் சவால்கள்தான் பெரிய நடிகராகணும்ங்கற உங்க லட்சியத்துக்கு உரமாக மாறி, இந்தச் சினிமா உலகத்துல உங்களை ஒருநாள் ஜெயிக்கவைக்கும்” என அறிவுரை சொன்னார்.

சொன்னதுபோலவே அந்தப்படம் வெளியானபோது, அதுவரை அந்த நாலெழுத்து கதாநாயகனுக்கு இருந்த பெயர் புகழ் குறைந்து எம்.ஜி.ஆரின் வாள்சண்டை பிரமாதமாகப் பேசப்பட்டது. வீரதீர சாகசப்படங்களில் நடிக்கத் தகுதியான நடிகர் எனத் தயாரிப்பாளர்கள் உணர அந்தப் படம் காரணமானது. இப்படிப் பல சம்பவங்கள்...

நீண்ட போராட்டத்தின் முடிவில் எம்.ஜி.ஆரின் கதாநாயகன் கனவை நனவாக்கிய ஜூபிடர் பிச்கர்ஸ் நிறுவனம் அவருக்கு மட்டுமல்ல;  தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் தவிர்க்கவியலாத பெயர். ஆரம்பகால தமிழ் சினிமாவின் தேர்ந்த பத்துப் படங்களைப் பட்டியலிட்டால், அதில் பாதிக்கும் மேல் இந்த நிறுவனம் தயாரித்தவையே இடம்பெறும்.  

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமான 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஜூபிடர் பிச்கர்ஸ் நிறுவனம். இதன் உரிமையாளர்கள் எஸ்.கே மொஹிதீன் - எம் சோமசுந்தரம். நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் பெயர்பெற்ற இவர்கள், மதங்களைக் கடந்தும் அப்பழுக்கற்ற நட்புகொண்ட நண்பர்கள். சினிமாவை நேர்த்தியாகத் தயாரித்தவர்கள். தங்களின் இறுதிக்காலம்வரை நட்புடன் படங்களைத் தயாரித்தவர்கள்.  தானியக்கொள்முதல் நிறுவனத்தில் ஒரு குமாஸ்தாவாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் எஸ்.கே. மொஹிதீன். அந்த நிறுவனத்தின் பாகஸ்தர்களில் ஒருவர், மற்றொரு பாகஸ்தரான முத்துசாமி செட்டியார் என்பவருக்குத் தெரியாமல் கணக்கு வழக்குகளிலும் தனிப்பட்ட சில செயல்பாடுகளிலும் பல தவறுகள் செய்ய, அதைத் தட்டிக்கேட்டார் மொஹிதீன்.

இதனால் ஆத்திரப்பட்ட அவர், ''கூலிக்கார பயல் என்னைக் கேள்வி கேட்பதா'' என ஆத்திரமுற்று மொஹிதீனை வேலையைவிட்டுத் துரத்தினார். விஷயம் முத்துசாமிக்கு தெரியவந்து விசாரணை நடத்தியதில், நடந்த அனைத்தும் தெரியவர தன் பாகஸ்தரை விரட்டிவிட்டு, தவறுக்குத் துணைபோகாமல் நேர்மையாக வாதிட்ட மொஹிதீனை தன் பாகஸ்தராகச் சேர்த்துக்கொண்டார். முத்துசாமி செட்டியாரின் காலத்துக்குப்பின், அவரது மகன் எம்.சோமசுந்தரத்துடன் மொஹிதீன் நட்பானார். இந்த நட்பில்  பூத்ததுதான்,  ஜூபிடர் நிறுவனம். 

ஆரம்பத்தில் மொஹிதீனும் சோமுவும் இணைந்து 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ்' என்ற பெயரிலேயே படங்களைத் தயாரித்து வெளியிட்டனர். 1935-ல் வெளியான,'மேனகா' படம்தான் இவர்களின் தயாரிப்பில் வெளியான முதல்படம். என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து வெளியான இந்தப்படமே தமிழ்த்திரையுலகின் முதல் சமூகப்படம் என்ற பெருமைக்குரியது. 'வேலைக்காரி' படத்தின் மூலம் அண்ணாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியது.

'என் அரசியல் வாழ்விலிருந்து என் கலையுலக நுழைவு மூலம் ஓர் இதம் தரும் சூழலில் நான் புகுந்திருப்பது ரணங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் உள்ளது. என் அரசியல் வாழ்வில் எத்தனை நண்பர்கள் இருந்தாலும் கலையுலகில் என் ஒரே நண்பர்கள் ஜூபிடர் இரட்டையர்கள்தான். எஸ்.கே-வின் நேர்மை, கண்ணியம், வெளிப்படையான பேச்சு... இவை என் போற்றுதலுக்குரியது. சோமசுந்தரம் கலை ரசனைக்காரர்; எல்லோரையும் கவரும் தன்மை கொண்டவர்; அவருடைய புன்சிரிப்புக்கு மயங்காதவர் யாருமிருக்க முடியாது; நான் ஆண்களை குறிப்பிடுகிறேன்” என, 'வேலைக்காரி' திரைப்படத்தின் வெற்றிவிழாவில் அண்ணா தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டார்.

கருணாநிதியின் ஆரம்பகால வளர்ச்சியில் பெரும்பங்களிப்பு ஜூபிடருக்கு உண்டு. இப்படி 3 முதல்வர்களின் வாழ்வில் முக்கிய இடம்பெற்றது ஜூபிடர் நிறுவனம். 

கலைமேதை ராஜா சாண்டோவை அறிமுகப்படுத்திய சந்திரகாந்தா, பி.யு.சின்னப்பா நடித்து பெரும்வெற்றிபெற்ற 'கண்ணகி' மற்றும் 'மஹாமாயா', எம்.ஜி.ஆரின் 'ஸ்ரீமுருகன்', 'ராஜகுமாரி', அண்ணா கதை - வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'அபிமன்யு', 'மோகினி', 'நாம்', 'மனோகரா', 'அரசிளங்குமரி' போன்றவை எந்தக் காலத்துக்கும் ஜூபிடர் பெயர் சொல்லும் படங்கள். 1960-களின் முற்பகுதிவரை சினிமா தயாரிப்பில் வெற்றிகரமாக இயங்கிவந்த ஜூபிடர் நிறுவனம் காலமாற்றம், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களால் 1964-ல் என்.டி ராமராவ் நடித்த 'மர்மயோகி' (தெலுங்கு) படத்துடன் தன் சினிமா சேவையை முடித்துக்கொண்டது. 

Subramanian Muthaiya

Leave a comment

Comment