TamilsGuide

உக்ரைன் அருகே சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் - கேப்டன் உயிரிழப்பு

உக்ரைன் அருகே கருங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில், கப்பலின் கேப்டன் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், இதுவரை குறிப்பிடத்தக்க உடன்பாடு எட்டப்படாததால் மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடிசா அருகே கருங்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றை ரஷிய படைகள் தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்டிகுவா மற்றும் பார்படா நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்த சரக்கு கப்பல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கப்பலின் கேப்டன் உயிரிழந்ததாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் சேத விபரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 

Leave a comment

Comment