மாத்தறை வெலிகம நகரிலுள்ள பிரதான அஞ்சல் நிலையத்தின் வருடாந்த கணக்காய்வின்போது சுமார் 21 இலட்சம் ரூபாய் பணம் கணக்கில் இடம்பெறாதமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிகம பிரதான அஞ்சல் நிலையத்தின் கீழ் 17 உப அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றின் ஊடாக கடிதப் பரிமாற்றம், பொருட்களை அனுப்புதல், வாகன அபராதம் செலுத்துதல், முதியோர் கொடுப்பனவு மற்றும் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த அஞ்சல் நிலைய வலையமைப்பின் ஊடாக நாளாந்தம் 30 முதல் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அஞ்சல் நிலையங்களில் பெறப்படும் வருமானம் மற்றும் மேற்கொள்ளப்படும் செலவுகள் தினசரி முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பிரதான அஞ்சல் நிலையத்தில் அதிகபட்சமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கையிருப்பாக வைத்திருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
அதற்கு மேலதிகமாக கிடைக்கும் பணம் தினசரி வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டிய நிலையில், அவ்வாறு வைப்பிலிடப்பட வேண்டிய பணம் முறையாகக் கையாளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற வருடாந்த கணக்காய்வின்போது சுமார் 21 இலட்சம் ரூபாய் தொடர்பில் கணக்கு முரண்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பணம் தொடர்பான கணக்கு விவரங்கள் மற்றும் அது கையாளப்பட்ட விதம் குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வெலிகம பிரதான அஞ்சல் நிலையத்தின் தற்போதைய அஞ்சல் நிலைய அதிபரிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது, உரிய அனுமதியின்றி இந்த விடயம் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


