TamilsGuide

5 வருடத்திற்கு பிறகு சினிமாவிற்கும், அரசியலுக்கும் இருக்கும் வித்தியாசம் விஜய்க்கு தெரிய வரும் - நடிகை ரோஜா

திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும், அரசியலில் நுழையும்போது நடிகர் திலகம் உட்பட பல நடிகர்கள் தமிழ்நாடு மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதற்கு மாற்றாக எம்.ஜி.ஆர்.க்கு பிறகு கட்சி ஆரம்பித்த பின், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சரானவர் நடிகர் விஜய்.

இதற்கு அவர் ரசிகர்கள் மிகப்பெரிய காரணம். அதேவேளையில் மாற்றத்தை விரும்பிய பலரும் தமிழ்நாட்டில் இருந்த மற்றக் கட்சிகளை தவிர்த்து, த.வெ.க.வை தேர்வு செய்தனர்.

இருப்பினும் தவெகமீது இன்னும் சில விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் ஒன்று அனுபவமின்மை.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் இந்த வெற்றிக் குறித்து நடிகை ரோஜா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

அதிர்ஷ்டத்தால் நடிகர் விஜய் முதல்முறையே முதலமைச்சர் ஆகிவிட்டார். ஒருவேளை இத்தேர்தலில் அவர் தோற்றிருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கட்சியை நடத்துவதற்கு மிகவும் கடினப்பட்டிருப்பார்.

கட்சிக்காக அவர் எதுவும் உழைக்கவில்லையே. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் அவர் களப்பணி மேற்கொள்ளவில்லை. அங்குள்ள மக்களின் பிரச்னைகளை கேட்டு தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கான இந்த பிரச்னையை சரிசெய்வேன் என்று சொல்லக்கூட அவருக்கு சரியான கால அளவு இல்லை.

தமிழ்நாட்டின் முக்கால்வாசி தொகுதிகளுக்கு அவர் பிரசாரத்திற்கு செல்லவில்லை. அனைத்து மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பது சரியாக வரும் என எனக்கு தோன்றவில்லை.

சினிமாவில் ஏழைகளுக்கு உதவுவதுபோல காட்சிகள் வைக்கப்படும். அதேபோல் அவர் நிஜத்திலும் இருப்பார் என்ற ஒரு கற்பனையில் ஓட்டு போட்டுள்ளனர். உண்மையில் அவர் செய்வாரா என இவர்கள் (மக்கள்) யாருக்கும் தெரியாது. எனக்கு ஒரே ஆச்சர்யம் விஜய் கட்சி தொடங்கும்போது.

இவர் பேசவே மாட்டாரே, நிறைய ஊர்களுக்கு செல்ல வேண்டுமே, நிறைய பேசவேண்டுமே என எண்ணினேன். அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே எப்படி செய்வார் என நானே ஆச்சர்யப்பட்டேன்.

உண்மைக்கும், சினிமாவுக்கும் இருக்கும் வேறுபாட்டை நாம் சிந்தித்திருப்போம். ஆனால், மக்கள் இதையும் சினிமா என நினைத்து வாக்களித்துள்ளனர்.

விஜய் ஆட்சி முடியும் 5 வருடத்திற்கு பிறகுதான் மக்களுக்கு தெரியவரும், அவரை சரியாக கணித்தார்களா என்று. விஜய்க்கும் அப்போது சினிமாவிற்கும், அரசியலுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியவரும். சினிமாவில் இருக்கும்போது நாம் எதுவும் செய்யாவிட்டாலும் நம்மை வாழ்த்துவார்கள், கொண்டாடுவார்கள்.

ஆனால் அரசியல் அப்படி கிடையாது. மக்களின் தேவைகள் அதிகம் இருக்கும். அவர்களின் தேவையை நாம் பூர்த்தி செய்யமுடியாவிடில், நாங்கள் என்னவோ நினைத்தோம், இவர் இப்படி செய்துவிட்டார் என நினைப்பார்கள்.” என தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment