அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், எவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உட்பட உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன.
இவ்வாறான நடவடிக்கைகளின் போது நாட்டை விட்டு பலர் தப்பிச் செல்ல முயற்சிக்கின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறத் திட்டமிடும் சந்தேகத்திற்கிடமான பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில், விமான நிலையம் மற்றும் பிரதான வெளியேறும் வாயில்கள் அருகில் பலத்த புலனாய்வுப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பமானவுடன் இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறி இதுவரை திரும்பாத சில அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் இராஜதந்திர மட்டத்தில் மற்றும் சர்வதேச சட்ட வழிமுறைகள் ஊடாக அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் ஏமாற்றிய குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம், திடீரென நோயுற்று தனியார் வைத்தியசாலைகல் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு சென்று தலைமறைவாக இருப்பதும் அரசியல்வாதிகளின் செயற்படாக உள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் மனைவி, உடல்நல குறைவு காரணமாக சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எதிர்வரும் 24ஆம் திகதி குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் பெரும் அளவிலான ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த நிலையில், திடீர் சுகவீனங்கள் என கூறி போலி மருத்துவ அறிக்கைகள் மூலம் வெளிநாடுகளுக்குத் தப்பியோட முயற்சிகள் இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, அவ்வாறான அரசியல்வாதிகள், உயமட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்ய புலனாய்வுப் பிரிவினருக்கு அரசாங்கம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விசாரணைக் குழுக்கள் முன்னிலையாகவதை தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளில் தஞ்சம் புகுந்து நாட்டைவிட்டுத் தப்பியோட முற்படும் நபர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


