அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு புதிய பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானுக்கு எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்ய வேண்டாம் என்றும், தற்போது அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Virtual Embassy in Iran வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில், மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்படுதல், வான்வழி மூடப்படுதல், எல்லைச் சோதனைகள் திடீரென மாற்றப்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியாவில் பொதுமக்கள் விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த மோதல் வேகமாக தீவிரமடையக்கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க குடிமக்கள் Smart Traveler Enrollment Program (STEP)-இல் பதிவு செய்து பாதுகாப்பு தகவல்களை பெற வேண்டும் என்றும், அவசர சூழ்நிலையில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், காவல்துறை அதிகம் இருக்கும் இடங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், அமெரிக்காவுடன் தொடர்புடைய இடங்களில் குறைந்தளவு கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வான்வழி தாக்குதல் ஏற்பட்டால், ஜன்னல்கள், கண்ணாடி கதவுகள் அருகில் செல்லாமல், விழுந்து கிடக்கும் பொருட்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் சவுதி அரேபியாவிலும் அமெரிக்க அரசு தனது குடிமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கியுள்ளது.


