TamilsGuide

சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை - இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர்களுடன் சுப்பிரமணியம் என்ற பெயர் கொண்ட நாயும் சென்றுள்ளது. அந்த நாயை முஸ்லிம் இளைஞர் ஒருவர் மிதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரும் அந்த வீடியோவின் கமெண்டில் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவும் அந்த வீடியோவின் கமெண்டில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.7.55 கோடி அபராதமும் விதித்தது.

இதனை எதிர்த்து அனோஜன் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான  எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மானும் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.

எனவே இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் தொடர்பில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment