நேட்டோ அமைப்பின் மிக முக்கிய இராணுவக் குழுவின் அடுத்த தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்பதவிக்கான தேர்தலில் கனடாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜென்னி காரிக்னனை தோற்கடித்து அவர் இப்பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் கூட்டத்தில் இத்தேர்தல் நடைபெற்றது.
நேட்டோ அமைப்பில் இது மிகவும் மதிப்புமிக்க ஒரு பதவியாகும். எனினும், வழக்கமாக அமெரிக்க அதிகாரியால் வகிக்கப்படும் 'உச்ச கூட்டுப் படைத் தளபதி' பதவிக்கு உள்ள அளவிலான அதிகாரம் இப்பதவிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இத்தேர்தலில் ஜெனரல் ஜென்னி காரிக்னன் வெற்றி பெற்றிருந்தால், நேட்டோ இராணுவக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருப்பார்.
மேலும், 2024 முதல் வகித்து வரும் கனடா இராணுவத் தலைமைப் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டியிருந்திருக்கும். வரலாற்று ரீதியாக இதுவரை மூன்று கனடியர்கள் மட்டுமே இப்பதவியை வகித்துள்ளனர்.
கடைசியாக 2000-களின் மத்தியில் ஆப்கானிஸ்தான் போரின் போதே கனடிய அதிகாரி ஒருவர் இப்பதவியில் இருந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி, வெற்றி பெற்ற ஜெனரல் கார்ஸ்டன் புரூயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
"சிறந்த தலைமைத்துவம், அனுபவம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய ஜெனரல் ஜென்னி காரிக்னனை இப்பதவிக்குப் பரிந்துரைத்ததில் கனடா பெருமையடைகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஜெனரல் ஜென்னி காரிக்னன், இத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும், தொடர்ந்து கனடிய ஆயுதப் படைகளின் மறுசீரமைப்பு மற்றும் தலைமைத்துவப் பணிகளில் தனது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இப்பதவியிலிருக்கும் இத்தாலியின் அட்மிரல் ஜுசெப்பே காவோ டிராகோன் அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள புரூயரின் கள அனுபவமும் திறமையும் நேட்டோ அமைப்பிற்குப் பெரிதும் உதவும் எனப் பாராட்டியுள்ளார்.


