TamilsGuide

அமெரிக்கா - ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை - ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள அரசியலும்

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க அதிகாரிகளும் ஹவுதி (houthi) பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனில் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான மூலோபாயத் தீவுகள் தற்போது ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அத்துடன் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பகுதியான பாப் அல்-மந்தேப் நீரிணையை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கும் எண்ணம் தனக்கில்லை என்றும், சவுதி அரேபியாவுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ஹவுதிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.

ஹவுதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்துமாறு சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அமெரிக்கா நேரடித் ராணுவத் தலையீட்டை விரும்பவில்லை என்று கூறிவிட்டார். எனினும், சவுதி அரேபியாவுக்காகத் தான் தலையிடத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இருப்பினும், காஸா மற்றும் லெபனான் மோதல்களுக்கு மத்தியில் இது அரபு உலகில் சவுதிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தயக்கம் நிலவுகிறது.

ஈரானுடன் ஏற்கனவே நீண்ட காலமாகத் தொடரும் போரினால் அமெரிக்காவின் ஆயுதக் களஞ்சியங்கள் குறைந்துள்ளதாகவும், நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ட்ரம்ப் புதிய போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை குறைந்ததால், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தனது பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது.
 

Leave a comment

Comment