nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான புதிய பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது.
இந்த பள்ளம் 2024 ஆம் ஆண்டிலே உருவாகியிருந்தாலும், தற்போதே இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் கேமராவிலிருந்து (LROC) கிடைக்கும் தரவுகளுடன் பணிபுரியும், ராபர்ட் வாக்னர், நிலவின் மேற்பரப்பின் ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறான பெரிய பிரகாசமான புள்ளி ஒன்றைக் கவனித்துள்ளார்.
சந்தேகிக்கப்படும் சிறுகோள் மோதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மோதல் நிகழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர்.
பின்னர், LRO கேமரா அந்த இடத்தின் மீது பறந்து சென்றபோது எடுத்த உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், பள்ளத்தின் அளவு, வடிவம் மற்றும் சுற்றியுள்ள மோதல் சிதைவுகளை அறிய உதவியது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் நிலவின் கிழக்கு விளிம்பில், 3 முதல் 6 மாடிக் கட்டிடம் அளவிலான ஒரு வால் நட்சத்திரம் அல்லது சிறுகோள் மோதியுள்ளது.
இந்த மோதல் 728 அடி அகலமும் , 141 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது.
இந்தப் பள்ளம் ஏறக்குறைய 2 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குப் பரவியுள்ளது எனவும், செங்குத்தாக அடுக்கப்பட்ட 3 மஞ்சள் பள்ளிப் பேருந்துகளை உள்ளடக்கக்கூடிய அளவுக்கு ஆழமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த மோதலால், நிலவில் தூசு மற்றும் பாறை துகள்கள் 100 கிமீ தூரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தூக்கி எறியப்பட்டு உள்ளது.
மேலும், சூரிய மண்டலத்திலேயே இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய, புதிதாக உருவான பள்ளமாக இது அறியப்படுகிறது.
நிலவு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானியான டாம் மெக்கெட்சினின் நினைவாக இந்தப் பள்ளம் அதிகாரப்பூர்வமாக மெக்கெட்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அளவிலான ஒரு மோதல் நிலவில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலாக நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
மோதிய பொருள் குறித்த மேலும் விரிவான பகுப்பாய்வு செய்து அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


