TamilsGuide

நச்சு புகை - யாழ்ப்பாணத்தில் இரவில் ஏற்பட்ட பதற்ற நிலை

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் நேற்று (17) அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு பற்றி எரிந்ததால் அங்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் குப்பைமேடானது நேற்று இரவு பற்றி எரிந்ததனால் யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக புகையால் மூடப்பட்டிருந்தது.

அத்துடன் நவாலி கல்லூண்டாய் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சு புகை சென்றது. இதனால் குப்பைமேடு பகுதிக்கு வந்த நவாலி பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீனை அணைக்குமாறு மக்கள் கூறியும், மாநகர சபையின் பணியாளர்கள், வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலையில் பாதை உள்ளதாக தெரிவித்ததனால் கோபமுற்ற மக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் எரியும் இடத்தினை போய் பார்வையிட்ட பின்பு, அந்த இடத்திற்கு செல்வதற்கு வழி சீராக இருப்பதாகவும், உடனடியாக தீயினை அணைக்குமாறும் கூறினர்.

குறித்த குப்பை மேடானது வாரா வாரம் தொடர்ச்சியாக எரிவதாகவும், இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபையோ, மானிப்பாய் பிரதேச சபையோ அதனை தடுப்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அந்த தீயை அணைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


 

Leave a comment

Comment