TamilsGuide

கனடாவில் டீசல் விலை உயர்வு - கடல் உணவுத் தொழில் கடும் நிதி நெருக்கடியில்

கனடாவின் கயோரப் பிராந்தியத்தின் மூன்று பகுதிகளிலும் நண்டு மிக முக்கியமான கடல் உணவு ஏற்றுமதிப் பொருளாக விளங்கும் நிலையில், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மீன்பிடித் தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது. தனது படகில் உள்ள 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டியை வாரத்திற்கு இரண்டு முறை நிரப்ப வேண்டியுள்ளதாகவும், அது மூன்று நாட்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் என மீனவர் காரல் ஆலன் தெரிவித்துள்ளார்.

மீன்பிடிப் படகுகள் மட்டுமன்றி, கடல் உணவுகளை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகளுக்கான டீசல் செலவும் உயர்ந்துள்ளதால், போக்குவரத்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தைச் சுமத்துகின்றன.

மீன்களைப் பிடிப்பது, விற்பனை இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது போன்றவற்றின் செலவு அதிகரிப்பதால், கடைகளில் நுகர்வோர் வாங்கும் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது.

டீசல் விலைக்கும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர் சில்வைன் சார்லிபோயிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மீன்களுக்கான விற்பனை விலையை மீனவர்களே நிர்ணயிக்க முடியாது என்பதால் அவர்கள் இருபுறமும் பாதிக்கப்படுகின்றனர்.

விலை உயர்வு காரணமாக டார்ட்மத் பகுதியைச் சேர்ந்த பட் ஸ்டீவன்ஸ் என்பவர் கூறுகையில், முன்பு 10 டொலர் முதல் 15 டொலர் வரை விற்ற ஹேடாக் மீன் துண்டு தற்போது 25 டொலர் முதல் 30 டொலர் வரை விற்பதால் பலர் கடல் உணவுகளை வாங்குவதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மீன்கள் மற்றும் நண்டுகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றாலும், அதிக டீசல் விலை மற்றும் பிற பராமரிப்புச் செலவுகள் காரணமாக இத்தொழில் நிதி ரீதியாக நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக ஆலன் கவலை தெரிவித்துள்ளார்.

டீசல் எஞ்சின்களுக்குப் பதிலாக ஹைப்ரிட்-எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு மாறப் பலர் விரும்பினாலும், படகுகளுக்கான அந்தத் தொழில்நுட்பம் இன்னும் முழுமையடையவில்லை என்பதோடு, அதற்கு ஆரம்பகட்ட முதலீட்டுச் செலவும் அதிகமாகும்.   
 

Leave a comment

Comment