ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக கனடாவை இணைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வான் டெர் லேயன், கனடாவிற்கான கதவுகளைத் திறக்க விரும்புவதாகவும், இது இரு தரப்பிற்கும் இடையிலான முக்கியத் துறைகளில் நெருங்கிய பிணைப்பை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு "தனித்துவமான கூட்டணியை" விரும்புவதாக கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடாவை "51 ஆவது மாநிலமாக" மாற்றுவது தொடர்பான அவரது கருத்துகளால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும், தயாரிப்புத் துறை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, எரிசக்தி, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தற்போது "இணை உறுப்பினர்" என்ற தகுதி ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில், கனடாவை இணை உறுப்பினராக்குவது என்ற நடைமுறை அமுலுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம் நம்பப்படுகிறது.


